11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் இன்று (அக்டோபர் 21) இரவு 9 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கும் ஆட்டத்தில் புனேரி பல்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதியது.
நடப்பு சாம்பியனான புனேரி பல்டன் அதன் தொடக்க ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிய 35-25 என்கிற கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது. அதேநேரத்தில், தனது தொடக்க ஆட்டத்தில் களமாடும் பாட்னா பைரேட்ஸ் வெற்றியுடன் தொடங்க நினைத்தது.
புனேரி பல்டன் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில், ஆரம்பத்தில் இருந்தே நடப்பு சாம்பியன் புனேரி பல்டன் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்ட நேர முடிவில், புனேரி பால்டன் 40-25 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில், புனேரி பால்டன் அணி 22 முறை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில் 13 முறை பாட்னா பைரேட்ஸ் அணியும், 5 முறை புனேரி பால்டன் அணியும் வென்றுள்ளன. 4 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன. இந்த வெற்றியின் மூலம், புனேரி பல்டன் 23 போட்டிகளில் 6வது முறை வெற்றி பெற்றுள்ளது.
கடைசியாக இவ்விரு அணிகள் கடந்த சீசனில் நடந்த அரையிறுதியில் மோதிய நிலையில், அந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 37-21 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வகை சூடிய புனேரி பால்டன் இந்த சீசனில், ஒரு வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மறுபுறம் கடந்த சீசனில் அரையிறுதியுடன் வெளியேறிய பாட்னா பைரேட்ஸ், ஆடிய 22 போட்டிகளில் 11 வெற்றி, 8 தோல்வி, 3 டை என 69 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“