Indian cricketer Arshdeep Singh Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கடந்த ஞாயிற்று கிழமை இரவு 7:30 மணிக்கு துபாயில் நடந்த சூப்பர் “4” சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. கடைசி வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் இருந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 60 ரன்கள் எடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியில் கேப்டன் பாபர் அசாம் 14 ரன்களிலும், நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்களும், முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 5 இந்தியாவை வீழ்த்தியது.
கேட்சை மிஸ் செய்த அர்ஷ்தீப் சிங்… வசைபாடிய நெட்டிசன்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் கேட்சை விட்டதற்கு கடுமையாக. ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர் அவரது சொந்த மாநில அரசியல் தலைவர்கள்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் சொதப்பல்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துபோனது. ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர். இதேபோல், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
லட்டு மாதிரி வந்த கேட்சை மிஸ் செய்த அர்ஷ்தீப் சிங்கைப் பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். அப்போது அவர் கொடுத்து ரியாக்ஷன் வீடியோவாக பதிவாகிய நிலையில், அந்த வீடியோ இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், அர்ஷ்தீப் சிங் அந்த கேட்சை தவற விட்டதற்கு நெட்டிசன்கள் சிலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிலர் ஆதரவாகவும் பேசி பதிவிட்டு வருகின்றனர்.
அர்ஷ் தீப் சிங்-கிற்கு ஆதரவாக ஓரணியில் திரண்ட பஞ்சாப்...
இந்நிலையில், அர்ஷ்தீப் சிங்ற்கு ஆதரவாக அவரது சொந்த மாநில (பஞ்சாப்) அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். பஞ்சாபின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), காங்கிரஸ், பிஜேபி மற்றும் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறுகையில், அர்ஷ்தீப் திறமைகள் நிறைந்த வீரர் என்றும், வரும் நாட்களில் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். துபாயில் இருக்கும் கிரிக்கெட் வீரரின் தாயார் பல்ஜித் கவுருடன் தொலைபேசியில் பேசிய அவர், முழு நாடும் தனது மகனின் பின்னால் உறுதியாக இருப்பதாக உறுதியளித்தார். அணி நாடு திரும்பியதும், அர்ஷ்தீப்பை தனிப்பட்ட முறையில் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் தனது ட்விட்டர் பதிவில், “வெற்றியோ தோல்வியோ விளையாட்டில் கொடுக்கப்படுகிறது. அர்ஷ்தீப் குறுகிய காலத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த வரவிருக்கும் நட்சத்திரம். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். அவரை ட்ரோல் செய்யவபவர்கள் பிற்போக்கு மனோநிலை கொண்டவர்கள். அர்ஷ்தீப் தேசத்தின் எதிர்காலம். அவர் இளைஞர்களுக்கு உத்வேகம். விளையாட்டில் வெறுப்புக்கு இடமில்லை." என்று பதிவிட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பியும், மாநில ஆலோசனைக் குழுத் தலைவருமான ராகவ் சாதா, அர்ஷ்தீப் மீது வரும் வெறுப்பு பயங்கரமானது என்று குறிப்பிட்டுள்ளார். “23 வயதான அர்ஷ்தீப் ஒரு வகையான வெறுப்புக்கு ஆளாக்கப்படுவது பயங்கரமானது. அந்த இளைஞனை கொஞ்சம் தளர்த்துவோம். அர்ஷ்தீப் ஒரு அற்புதமான திறமைசாலி மற்றும் வரும் ஆண்டுகளில் இந்திய பந்துவீச்சை வழிநடத்துவார். எந்த வெறுப்பும் அவரை வீழ்த்த முடியாது." என்று கூறியுள்ளார்.
அர்ஷ்தீப் சிங்கை ஆதரித்து ட்வீட் செய்துள்ள கேபினட் அமைச்சர் ஹர்பால் சீமா, “அதிக அழுத்த சூழ்நிலைகளில், எல்லா நேரத்திலும் தவறுகள் நடக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் அனைவரும் மனிதர்கள். எங்கள் இளம் வீரர் அர்ஷ்தீப்பை விமர்சிக்கவோ கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை. டீம் இந்தியா தனது சிறந்த கால்களை முன்னோக்கி நகர்த்தியது. மேலும் அவர்களின் எதிர்வரும் போட்டிகளுக்கு எனது வாழ்த்துக்கள்." என்று தெரிவித்துள்ளார்.
I just met bowling superstar Arshdeep's family in Kharar, Punjab. His parents have persevered & sacrificed so much. His struggle & perseverance, from humble origins to playing for India at international stage is inspiring. We all stand firmly with Arsh today. #IStandWithArshdeep pic.twitter.com/mcT1DlPsRl
— Raghav Chadha (@raghav_chadha) September 5, 2022
பின்னர் நேற்று மாலை, சாதா காரரில் அர்ஷ்தீப்பின் குடும்பத்தினரை சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து, அவர் ட்விட்டரில், “பந்து வீச்சு சூப்பர் ஸ்டார் அர்ஷ்தீப்பின் குடும்பத்தை பஞ்சாபின் கராரில் சந்தித்தேன். அவரது பெற்றோர்கள் விடாமுயற்சியும் தியாகமும் செய்துள்ளனர். அவரது போராட்டம் மற்றும் விடாமுயற்சி, தாழ்மையான தோற்றம் முதல் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக விளையாடுவது வரை ஊக்கமளிக்கிறது. நாம் அனைவரும் இன்று அர்ஷுடன் உறுதியாக நிற்கிறோம். #IStandWithArshdeep” என்று பதிவிட்டுள்ளார்.
தவறவிட்ட கேட்ச்-க்காக அர்ஷ்தீப்பை கேலி செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று முன்னாள் பஞ்சாப் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் கூறியுள்ளார். “இதுபோன்ற விஷயங்கள் (கேட்ச்சை கைவிடுவது) விளையாட்டுகளில் நடக்கும். குறிப்பாக இதுபோன்ற மிகப்பெரிய அழுத்தத்தின் கீழ் இப்படி நடப்பது வழக்கம் தான். நமது விளையாட்டு வீரர்களை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். அர்ஷ்தீப், ஏமாற்றம் அடைய வேண்டாம். உங்களுக்கு நீண்ட மற்றும் புகழ்பெற்ற வாழ்க்கை உள்ளது, அர்ஷ்தீப்பை நினைத்து பெருமை கொள்கிறேன்.”என்று அவர் பேஸ்புக் பதிவு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா தனது ட்வீட் மூலம் ட்ரோல் செய்ப்பவர்களை கடுமையாக சாடியுள்ளார். “உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் அர்ஷ்தீப் சிங் நீங்கள் எதிர்காலத்தில் தேசத்திற்கு பல விருதுகளை கொண்டு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆன்லைன் ட்ரோல்கள் உங்கள் நேர்மறை மற்றும் ஆற்றலைப் பாதிக்க விடாதீர்கள். அடுத்த போட்டியில் உங்களின் அற்புதமான ஆட்டத்தை தேசம் எதிர்நோக்கும்.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிரான சமூக ஊடகத் தாக்குதலைத் தாக்கி, “நாங்கள் முதல் மற்றும் முன்னணி இந்தியர்கள். இந்து, முஸ்லீம், சீக்கியர் மற்றும் கிறித்தவர்கள் பின்னர். சீக்கியர்கள் மிகவும் தேசபக்தி மற்றும் தேசியவாத கொண்ட சமூகம். கைவிடப்பட்ட கேட்ச் காரணமாக அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி என்று முத்திரை குத்துவது நமது தேசிய ஆன்மாவிற்கும், விளையாட்டுகளின் ஆன்மாக்கும் எதிரானது.
பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் வேகப்பந்து வீச்சாளரைக் குறிவைத்தவர்களைத் தாக்கி பேசியுள்ளார். “அர்ஷ்தீப் சிங் ஒரு பிரகாசமான வீரர். அவர் நன்றாக விளையாடினார், நாட்டில் உள்ள அனைவரும் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள், ”என்று அவர் ஒரு வீடியோ செய்தியில் கூறினார். மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், “கிரிக்கெட்டுக்கு முன் இந்தியா வருகிறது. நான் பாகிஸ்தான் பிரச்சாரத்தை நிராகரித்து அர்ஷ்தீப் சிங்குடன் நிற்கிறேன்."என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமுமான ஹர்பஜன் சிங் தனது ஆதரவை அர்ஷ்தீப் சிங்கிற்கு வழங்கி இருந்தார். அவரை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.
Stop criticising young @arshdeepsinghh No one drop the catch purposely..we are proud of our 🇮🇳 boys .. Pakistan played better.. shame on such people who r putting our own guys down by saying cheap things on this platform bout arsh and team.. Arsh is GOLD🇮🇳
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 4, 2022
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில், “யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்.” என்று கூறி அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.