ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018: காலிறுதியில் பி.வி.சிந்து, சாய்னா

6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம்

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று ஸ்குவாஷ் விளையாட்டில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல், மலேசிய வீராங்கனை நிக்கோல் டேவிட்டை எதிர்கொண்டார். இப்போட்டியில் தீபிகா 0-3 என தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரியை எதிர்கொண்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், 1-3 என ஜோஷ்னா தோல்வியடைந்தார். இதனால், அவரும் வெண்கலப் பதக்கமே பெற்றார்.

அதேபோல், இன்று பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை ஃபிட்ரியானியை எதிர்கொண்டார். இதில், 21-16, 21- 14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா காலிறுதியை உறுதி செய்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியாவை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-12, 21-15 என்ற நேர்செட்களில் பி.வி. சிந்து வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

தற்போதுவரை இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close