ஆசைத்தம்பி
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, சமீப காலங்களாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வருகிறார். ஒவ்வொரு தொடரின் போதும், லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதி போன்றவற்றை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் சிந்து, இறுதிப் போட்டி என்று வந்தாலே தோல்வி அடைந்து விடுகிறார்.
2016 ஒலிம்பிக் தொடர், கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் தொடர், 2017ல் நடந்த துபாய் சூப்பர் சீரிஸ் தொடர், இந்தியன் சூப்பர் சீரீஸ், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடர், இந்தாண்டு நடைபெற்ற காமல்வெல்த் தொடர் என இவை அனைத்து தொடரிலும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறிய சிந்து, யார் வைத்த செய்வினையோ, பைனலில் தோற்று ரசிகர்களை ஏமாற்றினார்.
அதிலும், காமன்வெல்த் போட்டியில், சக நாட்டு வீராங்கனை சாய்னா நேவாலுடன் மோதிய போது, பெரும்பாலானோர் சிந்துவே வெற்றிப் பெறுவார் என நினைத்தனர். ஆனால், தோல்வியே அவருக்கு பரிசாக கிடைத்தது.
ரசிகர்கள் ஏமாற்றமாக உணர்ந்தாலும், சிந்து என்ன சொல்கிறார் தெரியுமா? 'நான் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. தினமும் நிம்மதியாக தூங்குகிறேன்' என்கிறார்.
அவர் கூறுகிறார், "தொடர்ந்து இறுதிப் போட்டிகளில் நான் தோற்பது என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. பாதிக்க விட்டதும் இல்லை. மக்கள் இதைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதையே பெரிய விஷயமாக தான் நான் பார்க்கிறேன். அதுவே ஒரு பெரிய சாதனை தான். முன்பெல்லாம், காலிறுதிப் போட்டியிலோ, அரையிறுதிப் போட்டியிலோ தோல்வி அடைந்து வெளியேறிவிடுவேன். ஆனால், இப்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடுகிறேன். இதனால், நான்
தினமும் நிம்மதியாக தூங்கி தூங்குகிறேன்.
இறுதிப் போட்டி ஆடும்போது, அன்றைய தினம் யாருக்கான நாளாக இருக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி. அன்று என் எதிராளியின் நாளாக இருந்தால், அவர் வெற்றி பெறுவார். எனது நாளாக இருந்தால், நான் வெற்றிப் பெறுவேன். இதனால், நான் தோற்கும் போது, எல்லாம் என்னை விட்டு போய்விட்டதாக நினைக்க மாட்டேன். மாறாக, தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அடுத்து முறை அதிக பலத்துடன் களம் இறங்குவேன்.
அடுத்ததாக, சூப்பர் சீரிஸ் தொடர்கள் வரவுள்ளன. ஆசிய விளையாட்டு தொடரும் நடைபெற உள்ளது. ஆனால், எப்போதும் எனது சாய்ஸ் ஆசிய விளையாட்டு தொடர் தான். ஏனெனில், அங்கு தான் போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கும். சவால்கள் அதிகம் இருக்கும். எனவே அதுபோன்ற களங்களில் எனது திறமையை நிரூபித்து, சாதிக்க விரும்புகிறேன். அது எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சாய்னா நேவால் தான் என் போட்டியாளர் என்கிறார்கள். விளையாட்டில் போட்டியாளர் இருப்பது தான் நல்லது. ஆனால், பேட்மிண்டன் கோர்ட்டுக்குள் வந்துவிட்டால், ஒருவர் மட்டுமே வெற்றிப் பெற முடியும். எனவே, அப்போது அவரது வெற்றிக்காக அவர் ஆட வேண்டும், எனது வெற்றிக்காக நான் ஆட வேண்டும். களத்திற்கு வெளியே நாங்கள் சாதாரண நபர்கள் தான். போட்டியாளர்கள் கிடையாது. அவர் வேலையை அவர் பார்ப்பார். என் வேலையை நான் பார்ப்பேன். ஆனால் ஒன்று, சாய்னா நம் நாட்டின் பெருமை.
எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் பயிற்சியாளர் கோபிசந்தின் பங்கு மதிப்பிட முடியாதது. பயிற்சி என்று வந்துவிட்டால், காலை முதல் மாலை வரை எங்களுடனேயே இருப்பார். அவரது அர்ப்பணிப்பு நம்மை பிரமிக்க வைக்கும். எங்களுக்காக அவர் பல விஷயங்களை தியாகம் செய்துள்ளார்" என கூறியிருக்கிறார் சிந்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.