இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள அவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் ரியோ 2016 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
2021 ஆம் ஆண்டில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். அவரின் சாதனைகளைப் போற்றும் வகையில், இந்திய அரசாங்கம் அவருக்கு 2020 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்ம பூஷன் விருதை வழங்கியது.
இந்நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இந்த நிலையில், பி.வி சிந்து - வெங்கட தத்தா சாய் தங்களது திருமணத்திற்கு முன்னதாக மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும் வருகிறார்கள்.
சிந்துவின் வருங்கால கணவரான வெங்கட தத்தா சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“