Sports, cricket - Quinton de Kock Tamil News: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் முன்னணி க்கெட் கீப்பர்-பேட்டராக இருப்பர் குயின்டன் டி காக். கடந்த 2013ல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர் இதுவரை 140 போட்டிகளில் விளையாடி 17 சதம், 9 அரை சதங்களுடன் 44.85 சராசரியுடன் 5966 ரன்களை எடுத்துள்ளார். அணியின் முதன்மை விக்கெட் கீப்பராகவும் இருந்து வரும் இவர் 197 ஆட்டமிழப்புகளை (183 கேட்சுகள், 14 ஸ்டம்பிங்) எடுத்துள்ளார்.
30 வயதான டி காக் 50-ஓவர் கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையில் மிரட்டலான தொடக்கத்தை கொண்டிருந்தார். மேலும் வேகமாக ஆயிரம் ரன்களை (21 இன்னிங்ஸ்களில்) எடுத்த 4வது பேட்டர் என்கிற பெருமையைப் பெற்றார். 2016ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செஞ்சூரியனில் 178 ரன்களை குவித்து அசத்தினார். அவர் 2020-2021ல் தென்ஆப்ரிக்க அணியை வழிநடத்தினார்.
டி காக் கடந்த 2021ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குயின்டன் டி காக் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், டி-20 போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டிற்கு குயின்டன் டி காக் ஒரு சிறந்த வீரராக இருந்தார். அவர் தனது தாக்குதல் பேட்டிங் பாணியில் பெஞ்ச்மார்க்கை அமைத்தார். பல ஆண்டுகளாக அணியின் முக்கிய வீரராக இருந்தார். அவர் கேப்டனின் ஆர்ம்பேண்ட்டையும் அணிந்திருந்தார், அது வெகு சிலரே மட்டுமே வைத்திருக்கும் மரியாதை.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அவரது முடிவை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் பல ஆண்டுகளாக அவர் செய்த சேவைக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அவர் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் அவர் எங்களது அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்." என்று என்று தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் இயக்குனர் ஏனோச் என்க்வே தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“