சுருக்கமான பதில் இல்லை... ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்!

இதை ஜோக்காக தான் சொன்னேன். ஆனால், நீங்களும், மக்களும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் கிப்ஸுக்கும், இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் ட்விட்டரில் நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வம்புக்கு இழுத்தவர் என்ற பெயரை கிப்ஸ் பெறுகிறார்.

அதாவது, பிரபல ஷூ நிறுவனத்தின் மாடலாக செயல்படும் அஷ்வின், அதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டரில் பதிவிட்டு, ‘நான் அணிந்த ஷூவிலேயே மிகவும் வேகமாக ஓட உதவிய ஷூ இதுதான்’ என்கிற ரீதியில் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கிப்ஸ், “இப்போது நீங்கள் சற்று வேகமாக ஓடுவீர்கள் என நம்புகிறேன் அஷ்வின்” என்று ஸ்மைலி சிம்பள் போட்டு பதிவிட்டு இருந்தார்.

கிப்ஸின் இந்த கருத்துக்கு பதில் அளித்த அஷ்வின், “நிச்சயமாக உங்கள் அளவிற்கு என்னால் வேகமாக ஓட முடியாது. நீங்கள் பிடித்திருக்கும் இந்த இடத்தைப் நானும் பிடிக்க ஆசிர்வதிக்கப்படவில்லை. ஆனால், என் தட்டில் உணவு விழ வேண்டும் என்பதற்காக போட்டிகளை நிர்ணயம் செய்யும் அறிவை பெறாமல், நல்ல அறிவை பெற்ற வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் தான்” என்று காட்டமாக கூறியிருந்தார்.

அஷ்வினின் இந்த ட்வீட்டிற்கு பதில் அளித்த கிப்ஸ், “இதை ஜோக்காக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், நான் விடைபெறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து ட்வீட் செய்த அஷ்வின், “நான் இதை ஜோக்காக தான் சொன்னேன். ஆனால், நீங்களும், மக்களும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2000ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கேப்டன் ஹன்சி குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர், அவர் அதை ஒப்புக் கொண்டார். அதே தொடரில், கிப்ஸின் பெயரும் இதில் அடிப்பட்டது. இதனால், கிப்ஸிற்கு ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை குறிப்பிடும் விதமாக அஷ்வின் பதில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close