இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றி, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
இந்நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தனது ஆல்ரவுண்டர் திறனை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் இந்திய சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி 113 ரன்கள் எடுத்தார். மொத்தமாக 2 போட்டிகளிலும் அவர் 11 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை அணியின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனை இந்திய வீரர் அஸ்வின் சமன் செய்துள்ளார்.
இருவரும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர். அஸ்வின் மற்றொரு தொடர் நாயகன் விருது வென்றால் முத்தையா முரளிதரனை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல்:-
11 - முத்தையா முரளிதரன்
11 - ரவிச்சந்திரன் அஸ்வின்
9 - ஜாக் காலிஸ்
8 - சர் ரிச்சர்ட் ஹாட்லீ
8 - இம்ரான் கான்
8 - ஷேன் வார்ன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“