Ravichandran Ashwin | Hardik Pandya: ஐ.பி.எல். 2024 தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவர் முந்தைய இரண்டு (2022 -2023) சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார். 2022ல் குஜராத் சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அவரை டிரேடு முறையை மாற்றிக்கொள்ள அவரிடம் கேட்க, அவரோ வந்தால் கேப்டனாகத் தான் வருவேன் என கண்டிஷன் போட்டார். அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்த மும்பை நிர்வாகம், அவர்களின் அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்தவரும், ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான கேப்டனுமான ரோகித்தை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு பதவி உயர்வு கொடுத்தனர்.
இந்த உத்வேகத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கிய லீக் ஆட்டத்தில் தனது முன்னாள் அணியான குஜராத் டைட்டன்சுக்கு எதிராக மும்பை இந்தியன்சை வழிநடத்தினார் ஹர்திக். ஏற்கனவே, கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கிய கடுப்பில் அவரது ரசிகர்கள் இருக்க, வெற்றிகரமாக வீர நடை போட்ட குஜராத்தை பாதி வழியில் விட்டுவிட்டு வந்து விட்டார் என்கிற கோபத்தில் குஜராத் ரசிகர்கள் கொந்தளித்துப் போயிருந்தனர்.
ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிரான் முழக்கம் - ரசிகர்கள் மோதல்
இப்படியான சூழலில் மும்பை அணியுடன் களம் புகுந்த ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்களை முழுக்கமிட்டனர் மோடி ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள். அவருக்கு எதிராக அப்படி கோஷங்கள் எழுப்பப்பட்டது ஒருமுறை இரண்டு முறை அல்ல. அவரைப் பார்க்கும் போதும், டி.வி-யில் காட்டும் போதும், போட்டி தொடங்கும் முன் பின் அவர் மைக் பிடித்து பேசும் போதும், டிரெஸ்ஸிங் ரூமுக்குக்கு செல்லும் போதும் என அவர் முகம் தென்படும் இடங்களிலும் கோபக் கனலை அள்ளித் தெளித்தனர் ரசிகர்கள்.
இதேபோல், கடந்த புதன்கிழமை ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் போதும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிரான கோஷங்கள் முழுகின. போதாக்குறைக்கு சன்ரைசர்ஸ் அணி மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த அணியாக சாதனை படைத்தது. இந்த இலக்கை மும்பை அணியால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. அந்த அணி அடுத்தடுத்த பெற்ற தோல்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடக்க ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு அருகே பீல்டிங் செய்ய சொன்னது, 2வது போட்டியில் ரோகித் பீல்டிங் செய்தது என மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஒரே களேபரமாக இருப்பதாகவும், அணிக்குள் ரோகித் டீம் - ஹர்திக் பாண்டியா டீம் என இரண்டு அணிகளாக பிரித்து கிடப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மலிங்காவை உதாசீனப்படுத்தியதாக கூறி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த சம்பவத்தால் மனமுடைந்துள்ள மலிங்கா தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வாய்ப்பு உள்ளதாகவும் பூகம்பத்தை கிளப்பி விட்டுள்ளனர் ரசிகர்கள்.
அஸ்வின் விரக்தி பேச்சு
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டு வருவது குறித்தும், அவரது எதிரான இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான அஸ்வின் பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் ஆய்வாளர் பிரசன்னா அகோரமுடன் தனது யூடியூப் சேனலில் நேரலை ஸ்ட்ரீம் செய்தபோது, அஸ்வின் ரசிகர் போட்டுக்கும் கொள்ளும் சண்டைகளை (FAN WAR) முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இது நாளுக்கு நாள் "மிகவும் அசிங்கமாக மாறுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.
ரசிகர் ஒருவர், ஹர்திக் பாண்ட்யா விவகாரத்தில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமே தலையிட்டு, "இது நிஜமாகவே அணி நிர்வாகத்தின் மோசமான டிரான்ஸ்பர்" என்கிற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின்
"இதில் உரிமையாளர் - வீரர் என இருவருக்குமே எந்தப் பங்கும் இல்லை. பொறுப்பும் மாத்திப்பும் ரசிகர்களிடம் தான் உள்ளது. இது வேறு எந்த நாட்டிலாவது நடப்பதை நீங்கள் பார்த்தீர்களா? ஜோ ரூட் மற்றும் சாக் கிராலி ரசிகர்கள் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அல்லது ஜோ ரூட் மற்றும் ஜோஸ் பட்லர் ரசிகர்கள் சண்டையிடுவதைப் பார்த்தீர்களா? இது பைத்தியக்காரத்தனம்.
ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பேட் கம்மின்ஸ் ரசிகர்கள் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதை நான் பலமுறை கூறியுள்ளேன். இதுதான் கிரிக்கெட். இது சினிமா கலாச்சாரம் அல்ல. மார்க்கெட்டிங், பொசிஷனிங் மற்றும் பிராண்டிங் போன்ற விஷயங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். நான் அதை மறுக்கவில்லை. என் தரப்பில் இதையெல்லாம் நான் நம்பவில்லை, ஆனால் அதில் ஈடுபடுவதில் தவறில்லை.
ரசிகர் சண்டைகள் (FAN WAR) என்கிற இந்த அசிங்கமான அவர்கள் பாதையில் செல்லக்கூடாது. இந்த வீரர்கள் எந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது நம் நாட்டைத் தான். அப்படியானால், ஒரு கிரிக்கெட் வீரர் கோபப்படமால் இருப்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
உங்களுக்கு ஒரு வீரரைப் பிடிக்கவில்லை என்றால், அவருக்கு எதிராக நீங்கள் கோஷங்களை எழுப்புகிறீர்கள் என்றால், அதற்கு ஏன் அந்த அணி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்? இதற்கு முன் நடந்ததில்லை என நாம் நடந்து கொள்கிறோம். (சவுரவ்) கங்குலி சச்சின் (டெண்டுல்கர்) கீழ் விளையாடினார். இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட் தலைமையில் விளையாடியவர்கள். இவர்கள் மூவரும் அனில் கும்ப்ளேவின் கீழ் விளையாடியவர்கள், இவர்கள் அனைவரும் தோனியின் கீழ் விளையாடியவர்கள். அவர்கள் தோனியின் கீழ் விளையாடியபோது, இந்த வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள். தோனி கூட விராட் கோழியின் கீழ் விளையாடினார்.
இந்த விவகாரத்தில் நாம் ஒன்றாகச் செயல்பட வேண்டும். பிரச்சனை என்ன தெரியுமா? நாம் அனைவரும் நமது வீடுகளில் உட்கார்ந்து கொண்டு, வெளியே பார்த்து, குப்பைகளை வேறு யாராவது எடுப்பார்கள் என நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதை நாமே செய்து சிரமப்பட விரும்பவில்லை. முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இது ரியல் டைம் ஸ்போர்ட். ரியல் டைம் ஸ்போர்ட்சில்
உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படும். அதைத் தாண்டி, அதை எதிர்கொண்டு, எப்படி கிரிக்கெட் விளையாட என்கிற சமநிலையைக் நாம் தான் கண்டறிய வேண்டும். உண்மையான விளையாட்டை சினிமாவுடன் ஒப்பிட முடியாது. ஹீரோ வழிபாடுகளும் பெரிது. அது சரி தான். உங்களுக்குப் பிடித்தவற்றைப் பற்றி நீங்கள் விரும்பலாம். ஆனால் மற்றொரு வீரரைக் குறை சொல்லக்கூடாது. இது நமது நாட்டில் இருந்து மறைந்துவிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்." என்று அவர் கூறினார்.
At last, someone brought this up. Thanks @ashwinravi99! pic.twitter.com/tMCoRX5Vjd
— A J A Y (@ajkmr7) March 29, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.