r ashwin ms dhoniMs Dhoni | Ravichandran Ashwin: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ் தோனிக்கும் தனக்கும் இடையேயான நட்பு எப்படி தொடங்கியது என்பது குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
/indian-express-tamil/media/post_attachments/8f7abef8-7d6.jpg)
இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், "அனைவரும் போல் எனக்கும் கிரிக்கெட் விளையாடும் போது ஒரு கனவு இருந்தது. அப்போது தோனி தான் உலகின் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தார். அப்போது தோனியின் விக்கெட்டை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
சேலஞ்சர் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடினார். அப்போது அவருக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் நான் விளையாடினேன். இதுதான் நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று நான் பிரமாதமாக பந்து வீசினேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கூட நான் அவ்வளவு சிறப்பாக வீசினேனா என்று எனக்கு தெரியாது.
நான் வீசிய ஒவ்வொரு பந்தும் எப்படி வீசினேன் என்று இன்றளவும் எனக்கு நினைவு இருக்கிறது. நான் வீசியபோது தோனி ரன் அடிக்க முடியாமல் மிகவும் நெருக்கடிக்கு ஆளானார். இந்த சூழலில், அவருடைய விக்கெட்டை இஷாந்த் சர்மா தான் எடுத்தார். நான்தான் பந்தை கேட்ச் பிடித்தேன். பிடித்துவிட்டு ஓவராக கத்தினேன். அப்போது அணியில் இருந்த பத்ரிநாத், அனிரூதா ஸ்ரீகாந்த் போன்றோர் என்னிடம் வந்து பயமுறுத்தினார்கள்.
தோனியின் கேட்ச்சை இப்படி பிடித்து விட்டு கத்துகிறாயே உன்னை எப்படி அணியில் அவர் சேர்ப்பார் என்று கூறினார்கள். அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு இறுதியில் ஃபேஸ்புக் பிரபலமாக இருந்தது. அப்போது நான் தோனி பெயரில் ஒரு அக்கவுண்ட் இருந்ததை பார்த்தேன். நான் அதில், 'ஹாய்' என்று அனுப்பினேன். அவரும் எனக்கு 'ஹாய்' என்று பதில் அனுப்பினார்.
உடனே இது நிஜமாகவே தோனி தானா என்று கேட்டேன். அதற்கு உடனே அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். உங்களுடன் நட்பாக இருக்க நான் சந்தோஷப்படுகிறேன் என்று கூறினேன். அதற்கு தோனி, 'உலகக்கோப்பை வருகிறது அதற்கு தயாராக இரு' என்று கூறினார். நான் இது உண்மையா இல்லை பொய்யா? இந்திய அணிக்கு சேர்ந்து சில நாட்களில் எப்படி உலகக் கோப்பை விளையாட வாய்ப்பு வரும் என்றெல்லாம் யோசித்தேன்.
இதை நான் யாரிடமும் கூறவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் வந்த மெசேஜ் படி உலக கோப்பை அணியில் என்னுடைய பெயரும் இருந்தது. தோனியைப் பொறுத்தவரை, உங்களிடம் திறமை இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த குதிரை நிச்சயம் ஓடும் என்று அவர் நினைத்து விட்டால், உங்களை விடவே மாட்டார். தொடர்ந்து உங்களுக்கான வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார். நமக்கே ஆயர்ச்சி ஏற்பட்டு 'என்னை விட்டுருங்க போதும்' என்று சொன்னால் கூட தோனி விடமாட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/d4e7e4a8-5c4.jpg)
அந்த அளவுக்கு நம் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு கொடுப்பார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு போட்டியில் நான் சூப்பர் ஓவர் வீசுகிறேன் என்று தோனியிடம் கூறினேன். அவரும் எனக்கு வாய்ப்பு வழங்கினார். அந்த ஓவரில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து தோனி நம் மீது வைத்த நம்பிக்கையை நாம் வீணடித்து விட்டோம் என்று சோகமாக இருந்தேன். ஆனால் தோனி என்னை எதுவும் சொல்லவில்லை.
அப்போது உன்னிடம் விதவிதமாக பந்துகளை வீசக்கூடிய திறமை இருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள் என்று கூறினார். அந்த அறிவுரையை நான் இன்று வரை பின்பற்றுகிறேன். அதன் பிறகு அடுத்த போட்டியிலே எனக்கு முக்கியமான கட்டத்தில் ஓவர் வீச வாய்ப்பு கொடுத்தார். நான் அதில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தேன். அந்த தொடரில் எனக்கு தொடர் நாயகன் விருது கூட கிடைத்தது" என்று அஸ்வின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“