இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றி, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், கான்பூர் போட்டிக்குப் பிறகு இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் பயிற்சி குறித்து சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பேசுகையில், இங்கிலாந்துக்கு எப்படி பேஸ்பாலோ, அது போல் இந்தியாவுக்கு ‘கம்பால்’ எனக் குறிப்பிட்டப்பட்ட சில பதிவுகளைப் பார்த்தேன் என்று கலகலப்பாக அவர் பேசியுள்ளார்.
கான்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் இரண்டரை நாட்களுக்கும் மேலாக ஆடப்படாமல் பாதிக்கப்பட்டது. இதனால், 4-ம் ஆட்டத்தின் போது பேட்டிங் மீது கவனம் செலுத்திய இந்திய அணி அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை குவித்து அசத்தியது. ஒரு ஓவருக்கு 7.36 ரன்கள் என்கிற விகிதத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை திரட்டினர்.
கான்பூர் போட்டிக்குப் பிறகு, ஜியோ சினிமா உடனான உரையாடலில் பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின், "சமூக வலைதளத்தில் 'கம்பால்' பற்றிய சில பதிவுகளை என்னால் பார்க்க முடிந்தது. அது பற்றி எனக்கு யாரோ பகிர்ந்தார்கள். இது சுவாரஸ்யமானது. நேற்று நாங்கள் அவர்களுக்கு எதிராக பந்துவீசியபோது, ரோகித் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் எங்களிடம், அவர்களை அவுட் எடுக்க கிட்டத்தட்ட 80 ஓவர்கள் அவர்களுக்கு பந்து வீச வேண்டியிருந்தது. அதனால், நாம் அதிரடியாக பேட்டிங் ஆட வேண்டும் என்று எங்களிடம் கூறினார். தொடக்க வீரராக ஆடிய ரோகித் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்தார். எல்லோரும் அதைப் பின்பற்றினர்கள்.
கவுதம் கம்பீரின் பயிற்சி முறையைப் பொறுத்தவரை, பயிற்சியாளர்கள் அணியின் நலனுக்காக இங்கு உள்ளனர். மேலும் அவர்கள் விளையாட்டை எப்படி அணுகுகிறார்கள் அல்லது இந்திய கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தில் பெரிய வித்தியாசங்களை நான் காணவில்லை. அவர்களின் ஆர்வம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. அதாவது, அவர்கள் அந்த ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு நம்பமுடியாத அளவு அன்பைக் கொண்டு வருகிறார்கள்.
அவர் (கவுதம் கம்பீர்) மிகவும் நிம்மதியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் அவரை 'ரிலாக்ஸ்டு ராஞ்சோ' என்று அழைக்க விரும்புகிறேன். அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. காலையில் அணியினர் ஒன்றுகூடுகையில், அவரும் அதில் மிகவும் நிதானமாக இருக்கிறார். அவர், ‘நீங்கள் வருகிறீர்களா, தயவுசெய்து வாருங்கள்’ என்பது போல இருப்பார்.
ராகுல் பாய், நாங்கள் வந்தவுடன், அவர் விஷயங்களை ஒழுங்காக விரும்பினார்: ஒரு பாட்டில் கூட ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வைக்கப்பட வேண்டும். அவர் மிகவும் ரெஜிமென்ட். அவர் விஷயங்களை ஒழுங்காக இருக்க விரும்புவார்." என்று அஸ்வின் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“