13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் 12 நகரங்களில் மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று சந்திக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியின் தேதி மாற்றப்பட உள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியா அதன் அணியில் இடம் பிடிக்க உள்ள வீரர்கள் குறித்து தீர்மானிக்கும் இறுதி கட்ட ஆலோசனையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட விதத்தில் சோதனைகள் மீதான அவர்களின் அவநம்பிக்கையான முடிவு தெளிவாகத் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் தோல்வியடைந்தது. ஆனால், 3வது போட்டியில் வெற்றி பெறுவதற்கு அற்புதமான கம்பேக் செய்தது. இந்த போட்டியில் நம்பர். 4 இடத்தில் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் விளாசி 51 ரன்கள் எடுத்தார். ஆனால், அந்த அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் டி20 தொடரில் சஞ்சு பெரிய அளவில் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.
இதுவரை நடந்த 2 டி20 போட்டிகளிலும் களமாடிய அவர் 12, 7 என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த அற்புத வாய்ப்பை அவர் வீணடித்து வருகிறார் என்றும், இதன் பிறகு இந்திய நிர்வாகம் அவருக்கு சரியான வாய்ப்பை வழங்காது என்றும் ரசிர்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு டாப்-4ல் "இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
'சஞ்சுவுக்கு டாப்-4ல் இடமில்லை' - அஸ்வின் பேச்சு
தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், "அற்புதாமான வாய்ப்பு கிடைத்த மற்றொரு வீரர் சஞ்சு சாம்சன். ஒருநாள் தொடரில் அரைசதம் அடித்தார். டி20 போட்டியில், அவர் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் அவருக்கு பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் போட்டிக்கு வரும்போது, அவர் பெரும்பாலும் மூன்று அல்லது நான்காவது இடத்தில் தான் பேட் செய்வார். அவர் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மிகச் சிறந்த சராசரி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் 50 ரன்கள் எடுத்தார். அவர் உள்ளே வந்தவுடனேயே சுழலைக் குறைத்தார், அதுவே அவரது சிறப்பு.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், 3 மற்றும் 4வது இடத்தில் வாய்ப்பில்லை. சஞ்சுவின் திறமையைக் கருத்தில் கொண்டு, எந்த நேரத்திலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் மிகவும் நல்லவர், நாம் அனைவரும் அவருக்கு நல்லதையே விரும்புகிறோம். ஆனால் டீம் இந்தியா என்று வரும்போது சஞ்சுவிடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் பங்கு வேறு. அதனால், டாப் 4-ல் அவருக்கு இடமில்லை. உலகக் கோப்பைக்குப் பிறகு அவருக்கு இடம் கிடைக்குமா அல்லது உலகக் கோப்பைக்குப் பிறகு ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அவருக்கு இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இந்திய அணியில் 3வது இடம் கோலிக்கு என ஃபிக்ஸ் செய்யப்பட்டு விட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் கில் உள்ளனர். ஸ்ரேயாஸ் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் உடல்தகுதியுடன் இருக்கும்போது முற்றிலும் உறுதியாக அவர்கள் அணியில் இடம் பிடிப்பார்கள்.
பேக்-அப் வீரராக ஒரு கீப்பர்-பேட்டர் தேவை. எனவே, கே.எல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஆகியோரில் ஒருவர் கிடைக்கவில்லை என்றால், அவர்களுக்கு 4 அல்லது 5 இடத்தில் பேக்-அப் வீரர் தேவை. ஆனால் ஐ.பி.எல்-லில் சஞ்சு அந்த ரோலில் விளையாடவில்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டும் அந்த பங்கை செய்ய ஆரம்பித்து தற்போது அந்த ரோலில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இது அவருக்கும் இந்திய அணிக்கும் நல்ல செய்தி. ஒருநாள் உலகக் கோப்பையைப் பொறுத்த வரையில், சஞ்சு சாம்சன் தற்காலிக திட்டத்தில் முன்னோடியாக இருப்பார் என்றும், திலக் வர்மா கிட்டத்தட்ட இருப்பார் என்றும் நான் உணர்கிறேன்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.