Advertisment

சறுக்கிய பும்ரா; மீண்டும் நம்பர் 1 இடத்தைப் பிடித்த அஸ்வின்: ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை

தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் 6வது முறையாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
R Ashwin reclaims No 1 ranking among Test bowlers ICC Rankings tamil

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 ICC Rankings | Ravichandran Ashwin: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதேபோல், ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்  நிறைவடைந்தது. இதில், ஆஸ்திரேலியா 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.  

Advertisment

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, தரம்சாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் 6வது முறையாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நியூசிலாந்திற்கு எதிரான கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் வெற்றியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். 

இந்திய வேகப் புயலான ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதே சமயம் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தர்மசாலா டெஸ்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 15 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிடுகிடுவென முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை தாண்டி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலும் 2 இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடத்தை பிடித்துள்ளார். 

விராட் கோலி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தப் பட்டியலில் வில்லியம்சன் (நியூசிலாந்து) முதலிடத்திலும், ஜோ ரூட் (இங்கிலாந்து) 2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு, ஜெய்ஸ்வால் மொத்தம் 740 மதிப்பீடு புள்ளிகளை பெற்றுள்ளார். ஐ.சி.சி-யின் படி இரண்டு பேட்டர்கள் மட்டுமே அதிக மதிப்பீடு புள்ளிகளை பெற்றுள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (752) மற்றும் மைக் ஹஸ்ஸி (741) ஆவர் என்று குறிப்பிட்டுள்ளது. 

ஐ.சி.சி ஒருநாள் - டி20 தரவரிசை 

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 141 ரன்கள் குவித்த அயர்லாந்தின் ஹாரி டெக்டர், ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் இன்னும் தரவரிசையில் முதல் இடத்திலும், கில் மற்றும் விராட் கோலியுடன் 2 மற்றும் 3வது இடத்திலும், ரோகித் 5வது இடத்திலும் உள்ளனர்.

சூர்யகுமார் யாதவ், பில் சால்ட் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் டி20 தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். 

கேசவ் மஹாராஜ், ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோர் ஆடவர் ஒருநாள் போட்டிகளில் தரவரிசையில் முதலிடத்திலும், அடில் ரஷித், வனிந்து ஹசரங்க மற்றும் அகேல் ஹொசைன் ஆகியோர் டி20 சர்வதேசப் போட்டிகளில் நம்பர். 1, 2 மற்றும் 3வது இடத்திலும் உள்ளனர். 

ரவீந்திர ஜடேஜா, முகமது நபி மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் முறையே ஆடவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.

அனைத்து ஃபார்மெட்டுகளிலும் இந்தியா நம்பர் 1 அணியாக உள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் நம்பர். 2 மற்றும் 3 அணிகளாகவும், ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் ஒருநாள் போட்டிகளில் நம்பர். 2 மற்றும் 3 அணிகளாகவும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ravichandran Ashwin Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment