Ravichandran Ashwin | Chennai Super Kings: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆடி வருகிறார். இந்நிலையில், அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் மூலம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
தற்போது ஐ.பி.எல் ஏலம் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார் அஸ்வின்.
ஐ.பி.எல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னைக்கு புறநகரில் செயல்திறன் மையம் (ஹெச்.பி.சி) ஒன்றை திறக்க உள்ளது. அதன் தலைமை பொறுப்பை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கி உள்ளது. அங்குதான் இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெற உள்ளார்கள்.
சி.எஸ்.கே அணியானது ஏற்கனவே உலகின் பல்வேறு பகுதிகளில் அகாடமிகளைக் கொண்டிருப்பதால், ஹெச்.பி.சி ஆனது, சென்னை, ஜோகன்னஸ்பர்க் மற்றும் டெக்சாஸ் ஆகிய இடங்களைச் சேர்ந்த தங்கள் வீரர்களுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்க ஒரே இடத்தில் இருக்கும்.இந்த மையம் அடுத்த ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பு முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஆலோசனை சொல்வது, என்ன மாதிரியான பயிற்சிகள் அளிக்க வேண்டும் போன்றவற்றை முடிவு செய்யும் பொறுப்பு அஸ்வினுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.கே அணியின் கட்டுப்பாடு எப்படி தோனியிடம் இருக்கிறதோ, அதே போல இந்த மையத்தின் கட்டுப்பாடுகள் முழுவதும் அஸ்வின் வசம் இருக்கும்.
/indian-express-tamil/media/post_attachments/c8b4ca27-816.png)
அதேநேரத்தில், அஸ்வின் 2025 ஐ.பி.எல் மெகா ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட வலுவான வாய்ப்பு உள்ளது. இது மெகா ஏலமாக இருப்பதால், சி.எஸ்.கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே டிரேடு முறை மாற்றம் செய்யப்பட முடியாது. ஏலத்தில் சி.எஸ்.கே-வால் அஸ்வினை வாங்க முடியாவிட்டால், வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு, டிரேடு முறையில் வாங்குவதே சாத்தியமாக இருக்கும்.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசுகையில், "அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஏலத்தின் தன்மையை பொறுத்து அன்று என்ன வாய்ப்பு இருக்கிறதோ அதை நாங்கள் பார்ப்போம். இப்போது அவர் உயர் செயல் திறன் மையத்தில் பொறுப்பேற்கிறார். அதன் அனைத்து செயல்பாடுகளையும் அவரே கவனிப்பார். அவரை நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி ஆவார். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அணியான டிஎன்சிஏ முதல் டிவிசன் அணிக்காக விளையாடுவார்" என்று அவர் கூறினார்.
/indian-express-tamil/media/post_attachments/7c5f1695-934.jpg)
அஸ்வின் தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் ஆட தொடங்கிய காலத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி வந்தார். அதன் பின்னரே அவர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். 2016 ஆம் ஆண்டு அவர் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் இருந்து விலகி அதன் போட்டி நிறுவனமான கெம்ப்லாஸ்ட்-இல் இணைந்தார்.
பின்னர், 2018-இல் அங்கிருந்து மாறி டேக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்தின் டி.என்.பி.எல் அணியான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். தற்போது மீண்டும் தனக்கு முதல் வாய்ப்பு அளித்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு திரும்பி இருக்கிறார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு அஷ்வின் இடம் பெயர்வது கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டிக்கு சற்று முன்னதாக, அஸ்வினின் 100-வது டெஸ்ட் மற்றும் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான என் சீனிவாசன், அவரை வெகுவாகப் பாராட்டினார். "முன்னோக்கிச் செல்லும் போது உங்களுக்கு ஒரு பெரிய பங்கு உள்ளது" என்று அவர் நிகழ்வில் கூறினார்.
செயல்திறன் மையம் (ஹெச்.பி.சி) வரவிருக்கும் நிலையில், அதை முன்னோக்கி கொண்டு செல்வதில் அஸ்வினுக்கு பெரும் பங்கு இருக்கும் என்று சி.எஸ்.கே நம்புகிறது. அதனால், அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“