இந்த பரபரப்பு அடங்கிய போது இந்தியா பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்திருந்தது.
Ravichandran Ashwin Tamil News: ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டது. இதில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
Advertisment
இந்தியா – பாகிஸ்தான் கடைசி மோதல்
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தாத வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட அனுமதி கிடையாது என இந்தியா முடிவு செய்தது. இதனால், 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்திய அணி நேரடி போட்டிகளில் விளையாடவில்லை. ஐசிசி நடத்தும் பெரிய போட்டிகளிலும் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. அதனால், முன்பு எப்போதும் இல்லாத அளவில் இரு அணிகள் மோதும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடைசியாக ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக, 2021ல் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. படுதோல்வியடைந்த இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுக்க சமயம் பார்த்த நிலையில், 2022 டி20 உலகக் கோப்பை வந்தது.
Advertisment
Advertisements
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தை நேரில் காண 90,293 ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மிகவும் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களுக்கும் மற்றும் இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களான ராகுல் (4 ரன்) - ரோகித் (4 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். களத்தில் இருந்த விராட் கோலி பொறுமையாக மட்டையை சுழற்றி வந்தார். ஆனால், அவருடன் மறுமுனையில் ஜோடி சேர வந்த சூர்யகுமார் யாதவ் (15 ரன்), அக்சர் படேல் (2 ரன்) ஏமாற்றம் அளித்தனர். இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில் விளையாடி வந்த கோலி ஹர்திக் பாண்டியாவுடன் நல்ல ஜோடியை அமைத்தார். இருவரும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவை வெற்றி நோக்கி நகர்த்தினர்.
ஹரிஸ் ரவூப் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் கோலி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். இதனால் இந்தியாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, முகமது நவாஸ் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து (40 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். இதனிடையே, கோலிக்கு நவாஸ் வீசிய 4வது பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. அதன் ரீ-பாலில் கோலி சிக்ஸர் பறக்கவிட்டார்.
5வது பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க, கடைசி ஒரு பந்தில் இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. 2 ரன் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் ஆட்டத்தில் 'சூப்பர் ஓவர்' வீசப்படும் என்ற அச்சமும் இருந்தது. அப்போது களம் புகுந்த அஸ்வின், சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் சுழல விட்ட பந்தை கணித்து, லெக் சைடில் சென்ற பந்தை ஒயிடு வாங்கினார். அதற்கு ரீ-பால் வீசப்பட்ட பந்தை மிட்-ஆஃப் லாவகமாக தூக்கி விட்டு ஒரு ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த பரபரப்பு அடங்கிய போது இந்தியா பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்திருந்தது.
ஒரு பந்தை ஆட 7 ஆப்ஷன் - நெகிழும் அஸ்வின்
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து ஐ.சி.சி இணையதளத்தில் பேசிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கடைசி ஒரு பந்தை விளையாட விராட் கோலி தனக்கு 7 விருப்பங்களை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
“உலகக் கோப்பையில் கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நான் பேட்டிங் செய்ய வந்தபோது, விராட் கோலி எனக்கு அந்த ஒரு பந்தை விளையாட 7 விருப்பங்களை வழங்கினார்.
நான் விராட்டின் கண்களைப் பார்த்தபோது, அவர் அசாத்தியமாகவும், வேறொரு கிரகத்தில் இருப்பவர் போலவும் இருந்தார். இது விராட்டின் அற்புதமான இன்னிங்ஸ், இது எப்போதும் சிறந்த போட்டிகளில் ஒன்றாகும்." என்று அஸ்வின் கூறியுள்ளர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil