India Vs England | Ravichandran Ashwin: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்பின்னர், 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 214 ரன்களும், சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து, 557 என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜடேஜா 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
வரலாறு படைத்த அஸ்வின்
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஜோடி களமிறங்கிய நிலையில், இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி அபார சாதனை படைத்தார்.
அஸ்வின் சர்வதேச டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பவுலர் என்ற வரலாறு படைத்தார். அத்துடன் குறைந்த போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஜாம்பவான்கள் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரை முந்தி 2-வது இடம்பிடித்தார்.
அஸ்வின் மனைவி நெகிழ்ச்சி
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்கு இடையே தன் தாயாரை சந்தித்துவிட்டு மீண்டும் போட்டியில் அஸ்வின் கலந்து கொண்டதை அடுத்து, அஸ்வினின் மனைவி ப்ரீத்தி இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.
"ஐதராபாத் டெஸ்டில் 500வது விக்கெட் கிடைத்துவிடும் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. விசாகப்பட்டினத்திலும் அது நடக்கவில்லை. அதனால், அஸ்வின் 499 விக்கெட்டுகள் எடுத்திருந்த போது, டன் கணக்கில் இனிப்புகளை வாங்கி வீட்டில் அனைவருக்கும் கொடுத்தேன். 500வது விக்கெட் வந்தது. அமைதியாக கடந்து சென்றது. ஆனால், 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்து விட்டது. எங்களது வாழ்வின் மிக நீளமான 48 மணி நேரம் இதுதான்.
என்ன ஒரு அற்புதமான சாதனை. என்ன ஒரு சிறந்த வீரர். உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆர் அஸ்வின். நாங்கள் உங்களை நேசிக்கிறோம்." என்று அஸ்வினின் மனைவி ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின் போது குடும்ப அவசரநிலை காரணமாக வீடு திரும்பிய அஸ்வின் இந்தியாவுக்காக விளையாட மீண்டும் 4ம் நாள் ஆட்ட நேரத்தின் போது வந்தார். இப்போட்டியில் அஸ்வின் மொத்தமாக 2 விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Longest 48 hours of our lives’: R Ashwin’s wife Prithi Narayanan shares heartfelt note
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.