worldcup 2023 | new-zealand | Rachin Ravindra: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட 99.9 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.
சாதனை நாயகன்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியில் விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா ஒரு இந்திய வம்சாவளி ஆவார். அவரின் பெற்றோர்கள் நியூசிலாந்து வசித்து வருகிறார்கள். அவரது தாத்தா - பாட்டி பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். "ரச்சின்" என்ற பெயர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் ராகுல் ஆகியோரின் பெயர்களில் இருந்து எடுத்து அவரது பெற்றோர் சூட்டியுள்ளனர்.
கிரிக்கெட் மீது அலாதி பிரியம் கொண்ட ரச்சின் தற்போது 2023 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடந்த 9 போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் 3 சதம் உட்பட 565 ரன்களை குவித்துள்ளார். மேலும், நடப்பு உலகப் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான பட்டியலில் அவர் முதல் இடத்தில் உள்ளார். இதன்மூலம், 25 வயதிற்குள் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/46a5ae78-0e7.jpg)
சுத்தி போட்ட பாட்டி
இந்நிலையில், நியூசிலாந்தின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான ரச்சின் ரவீந்திரா, பெங்களூருவில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரது பாட்டி பிரார்த்தனை செய்து அவரை ஆசீர்வதித்தார். அப்போது அவரது பாட்டி அவருக்கு சுத்தி போட்டுள்ளார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“