Rachin Ravindra Tamil News: நியூசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் வீரர் தான் ரச்சின் ரவீந்திரா (22). இவரது பெயர் சற்று வித்தியாசமாகவும், பரீட்சையமாகவும் உள்ளதை பார்த்தால் இந்திய வம்சாவளியாகத்தான் இருப்பார் என்று அனைவரும் ஊகிப்பார்கள். அப்படி நீங்களும் ஊகித்து இருந்தால் அது சரிதான்.
ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட் ஆவார். 1990களில் நியூசிலாந்திற்குச் சென்றவர் அங்கே செட்டில் ஆகிவிட்டார். மேலும், அங்கு 'ஹட் ஹாக்ஸ் கிளப்' என்கிற கிரிக்கெட் கிளப்பையும் அவர் நிறுவியுள்ளார். இந்த கிளப்பில் உள்ள வீரர்கள் ஒவ்வொரு கோடைகாலத்திலும் இந்தியாவுக்கு வந்து பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இந்த கிளப் அணியில் விளையாடி வரும் ரச்சின் கடந்த 2011ம் ஆண்டு முதல் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு ஆண்டுதோறும் விசிட் செய்து ரெட் பால் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.
ரச்சின் இந்தாண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடத்த டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியில் அறிமுகமானர். இவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 54 ரன்கள் எடுத்துள்ளார். 2016ம் ஆண்டு நடந்த 19 வயதிற்குப்பட்டவர்களுக்கான (U-19) உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்தார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் நடந்த தொடக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்து அணியிலும் ரச்சின் இடம்பெற்றிருந்தார்.
ரச்சின் ரவீந்திராவின் முதல் பெயர், இந்தியாவின் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களின் பெயரை உள்ளடக்கியது. ரச்சினின் இனிஷியலான ‘ரா’ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெயரையும், அதே சமயம் ‘சின்’ என்பது சச்சின் டெண்டுல்கரின் பெயரையும் கொண்டதாக உள்ளது. இந்த இரண்டு ஜாம்பவான்கள் மேல் கொண்ட அன்பால் அவரது தந்தை அவருக்கு இந்த பெயரை சூட்டியதாக தெரிகிறது.
தற்போது இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று வியாழக்கிழமை முதல் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவதாக கேப்டன் ரஹானே அறிவித்தார். அவருக்கு ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தொப்பி வழங்கினார். இதேபோல், நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரன் அறிமுகமாக வீரராக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.