/tamil-ie/media/media_files/uploads/2018/12/a248.jpg)
racism against indian players india vs australia virat kohli
கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு, நடைபெற்று வரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில், நிறவெறி பிரச்சனை தழைத்தோங்கியுள்ளது.
உலகில் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணி என்றால், எப்போதும் முன்னிலையில் இருப்பது ஆஸ்திரேலியா மட்டும் தான். ஆனால், தற்போதைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
உள்ளூரிலேயே எதிரணிகளிடம் ஆஸ்திரேலியா தோல்விப் பெற்று வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது இந்திய அணி. டி20 தொடர் 1-1 என்று டிராவானது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலைடில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற, பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போது மெல்போர்னில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றியின் விளிம்பில் உள்ளது.
இந்தியா நிர்ணயித்த 399 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இன்னும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் இந்தியா மெகா வெற்றியைப் பதிவு செய்து, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கும்.
இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் லைவ் ஸ்கோர் கார்டை காண இங்கே க்ளிக் செய்யவும்
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஒரே டெஸ்ட் தொடரில், இரண்டு வெற்றியை பெற்றதே கிடையாது. இப்போட்டியில் வெல்லும் பட்சத்தின் முதன் முறையாக அந்த ருசியை இந்திய அணி அனுபவிக்கும். அதுமட்டுமின்றி, மேலும் சில சாதனைகளை இந்த வெற்றி மூலம் படைக்கவும் இந்திய அணி காத்திருக்கிறது.
இதற்குமுன், இந்தியாவிடம் இருந்து இப்படியொரு ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சந்தித்ததில்லை. அதனாலோ என்னவோ ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை இந்திய வீரர்களை நிறவெறியால் சாடி வருகின்றனர்.
இதே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது, வர்ணனை செய்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கெர்ரி ஓ’கீஃபே, “அகர்வால், ரயில்வே கேண்டீன் பணியாளர்கள் அல்லது வெயிட்டர்கள் பந்து வீச்சில் வேண்டுமானால் முச்சதம் அடிப்பார்” என்று கீழ்த்தரமாக விமர்சித்தார்.
‘கேண்டீன் பணியாளர்கள்’ என்று இந்திய முதல் தர கிரிக்கெட்டின் தரத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இப்படி வர்ணனை செய்த பொழுது, ஷேன் வார்ன் உடனிருந்தார். எந்த எதிர்ப்பையும் அவர் அங்கே பதிவு செய்ததாக தெரியவில்லை.
இதற்கு பின், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் தனது வர்ணனையின் போது, “இந்தியாவில் மாயங்க் அகர்வால் வைத்துள்ள ஆவரேஜ் 50 என்பது, ஆஸ்திரேலியாவில் 40க்கு சமம்” என்று தனது ஆதங்கத்தை வேறுமாதிரியாக வெளிப்படுத்தினார்.
கெர்ரி ஓ’கீஃபே வர்ணனைக்கு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர்கள் சிலரே தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 'நிறவெறியின் வெளிப்பாடு தான் இது போன்ற கருத்துகளுக்குக் காரணம். வீரர்களோடு ஆரோக்கியமான மோதலே சிறந்தது. இப்படி அநாகரீகமான வார்த்தைகளை வெளிப்படுத்தியது துரதிர்ஷ்டம்' என்று தெரிவித்தனர்.
ரசிகர்களும் பெருமளவில் எதிர்ப்புத் தெரிவிக்க, மாயங்க் மீதான கீழ்த்தரமான விமர்சனத்திற்கு மன்னிப்புக் கேட்டார் கெர்ரி ஓ’கீஃபே.
இந்தச் சம்பவம் அடங்குவதற்குள், நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, மெல்போர்ன் மைதானத்தின் புகழ்பெற்ற Bay 13 ஸ்டாண்டிலிருந்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் நிறவெறி வசைபாடினர். இந்திய ரசிகர்களை நோக்கி, 'உங்கள் விசாவைக் காட்டுங்கள்' என்று ரசிகர்களில் ஒரு பகுதியினர் கூச்சலிட்டனர்.
அதுமட்டுமின்றி, இந்திய கேப்டன் விராட் கோலியை நோக்கியும் நிறவெறி வசை, தனிநபர் தாக்குதல் நடத்தப்பட்டது. "Kohli's a wanker" என்று ரசிகர்கள் கூச்சலிட்டுள்ளனர் ‘வாங்க்கர்’ என்பது ஒரு மோசமான அர்த்தத்தை உள்ளடக்கியது.
இதனையடுத்து, அவர்களை மைதானத்திலிருந்து வெளியேற்றிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா, 'நிறவெறிக்கூச்சல் போட்டால், சட்ட நடவடிக்கை பாயும்' என்று ரசிகர்களை எச்சரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.