இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வருபவர் விராட் கோலி. இந்திய அணிக்கு கேப்டனாக செயலாற்றிய இவர் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஆடி வருகிறார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தி இருக்கிறார் கோலி.
இந்தியாவுக்காக இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கோலி 8848 ரன்களையும், 295 ஒருநாள் போட்டிகளில் 13906 ரன்களையும், 125 டி20 போட்டிகளில் 4188 ரன்களையும் எடுத்துள்ளார். தற்போது கோலி வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆட உள்ளார். இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியுடன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இடையில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலியை சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து மகிழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகை ராதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு திறமையினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். லண்டனில் இருந்து சென்னை திரும்பும்போது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்பிக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா பின்னணி
நடிகை ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில்தான் தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமானார். வெள்ளந்தியான அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் பொருந்திப் போனார். இந்தப் படத்தின் வெற்றி, இவரை தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வெயிட் காட்டிய ராதிகா, போல்டான மற்றும் ஸ்டைலிஷ்ஷான கேரக்டர்களிலும் மிகச் சிறப்பாக தன்னால் பொருந்த முடியும் என்பதை வெளிப்படுத்தினார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ராதிகாவிற்கு முன்னதாக நடந்த திருமணத்தில் ரேயான் என்ற மகள் உள்ளார். ராதிகா தற்போது நடிகை, சின்னத்திரை நடிகை, சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவருகிறார். இவரது சித்தி உள்ளிட்ட சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவை. தொடர்ந்து ஒரு கட்டத்தில் சீரியல்களில் மிகப்பெரிய கவனம் செலுத்தி தானே லீட் கேரக்டர்களில் நடித்தார் ராதிகா. தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“