அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை முதன்முறையாக கனடா வீராங்கனை பியாங்கா வென்றுள்ளார். இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியுற்றார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா, அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் கனடா நாட்டு இளம் வீராங்கனை பியாங்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் பியாங்கா கைப்பற்றினார்.
இதனையடுத்தது சுதாரித்து கொண்ட செரீனா வில்லியம்ஸ், இரண்டாவது செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் பியாங்கா இரண்டாவது செட்டையும் 7க்கு 5 என்ற கணக்கில் தனதாக்கி, நேர் செட்டுகளில் வென்று செரீனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.
இதன் மூலம், அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை முதல்முறையாக வென்ற கனடா வீராங்கனை என்ற சிறப்பையும் பியாங்கா பெற்றார். கோப்பை வென்ற பியாங்காவிற்கு 27 கோடியே 50 லட்ச ரூபாயும், தோல்வி அடைந்த செரீனாவிற்கு 18 கோடியே 50 லட்ச ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதேபோல், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருக்கும் என நடால் ஏற்கனவே கூறியிருந்தார். அதுபோலவே போட்டியின் துவக்கம் முதலே நடாலுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் பந்துகளை தெறிக்க விட்டார் மெத்வதேவ். எனினும் நடால் தனது அனுபவ ஆட்டத்தினால் அதனை சமாளித்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் இரண்டு செட்களையும் எந்தவித தடங்கலும் இன்றி கைப்பற்றினார் நடால்.
அதன்பின்னர் எழுச்சி பெற்ற மெத்வதேவ், ஆக்ரோஷமாக ஆடி புள்ளிகளைக் குவிக்க, போட்டியில் விறுவிறுப்பும் பரபரப்பும் அதிகரித்தது.
நடால் செய்த தவறுகளை சாதகமாக பயன்படுத்திய மெத்வதேவ் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் நடாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அடுத்த செட்டில் பதற்றமின்றி மிகவும் கவனமாக ஆடினார். கடும் போராட்டத்திற்கு மத்தியில் 5வது செட்டை நடால் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்வார்.
தற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்தில் உள்ளார். 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் நோவக் ஜோகோவிச் 3வது இடத்திலும், 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.