ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால் சிறுமி மீது தவறுதலாக பந்தை அடித்ததால், அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்டு முத்தம் கொடுத்த வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜெண்டினாவின் பெடிரிகோ டெல்போனிஸ் இருவரும் மோதினர்.
இந்த போட்டியின் போது ரஃபேல் நடால் அடித்த பந்து அம்பயர் அருகே நின்று கொண்டிருந்த சிறுமி மீது தவறுதலாக பட்டது. இதையடுத்து பதறிப்போன ரஃபேல் நடால் அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்டு, முத்தமும் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போட்டி முடிந்து இது குறித்து பேசிய ரஃபேல் நடால், "நான் அடித்த பந்த வேகமாக அந்த சிறுமியின் தலையில் பட்டது. நான் முதலில் பயந்துவிட்டேன். அந்த சிறுமி தைரியமானவள். டென்னிஸ் கோர்ட்டில் எனக்கு நடந்த மிகவும் பயங்கரமான தருணங்களில் இதுவும் ஒன்றாகும், பல ஆண்டுகளுக்கு முன்பு விம்பிள்டனில் இதுபோன்ற பயங்கரமான நிகழ்வு நடந்திருக்கிறது" என்றார்.
மேலும் பந்துவீச்சாளரை முத்தமிட்டது பற்றி உங்கள் மனைவி என்ன நினைப்பார் என்று கேட்டபோது, "15 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அதிகம் கவலைப்படமாட்டார்" என்று கிண்டலாகக் கூறினார்.
இந்தப் போட்டியில் ரஃபேல் நடால், 6-3, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.