ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று லண்டனில் தொடங்கியது.
களம் காணும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி ‘போரிஸ் பெக்கர்’ அணிப்பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், ‘பீட் சாம்ப்ராஸ்’ அணிப்பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இந்த பட்டத்தை 6 முறை வென்று சாதனை படைத்து இருக்கிறார்.
இந்த நிலையில், தொடக்க நாளான நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 9-ம் நிலை வீரர் ஜாக் சோக்கை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.
1 மணி நேரம் 31 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜாக் சோக்கை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.
இதன்பின் பேட்டியளித்த ரோஜர் ஃபெடரர், "சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தோடு இந்தாண்டை நிறைவு செய்வதில் எனக்கு வருத்தம் இல்லை. ஏனெனில், முதல் இடத்தில் இருக்கும் ரஃபெல் நடால், இந்தாண்டு முழுவதும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். நிறைய தொடர்களில் பங்கேற்றுள்ளார். நம்பமுடியாத வகையில் பல வெற்றிகளை இந்தாண்டு பெற்றுள்ளார். ஆகையால், இரண்டாம் இடத்தில் இருப்பதில் நான் வருத்தப்படத் தேவையில்லை. ஆனால், இந்தாண்டு நான் நினைத்த அளவுக்கு அதிகளவிலான போட்டிகளில் என்னால் விளையாட முடியவில்லை. அதற்காக மட்டுமே நான் கவலை கொள்கிறேன்" என்று ஃபெடரர் தெரிவித்துள்ளார்.