இந்திய மண்ணில் வருகிற அக்டோபர் முதல் தொடங்கும் ஒருநாள் உலக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியா கோப்பையை வென்றாலும், வெல்லாவிட்டாலும் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து கேள்வி நிச்சயம் எழும். 36 வயதான அவர் 2028ல் நடைபெற உள்ள அடுத்த உலகக் கோப்பை தொடர் வரை கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை.
அதனால், இந்தாண்டில் நடக்கும் தொடருக்குப் பிறகு, இந்திய நிர்வாகம் புதிய கேப்டன் தேடலை தொடங்கும். ஹர்டிக் பாண்டியா ஏற்கனவே ஒயிட்-பால் கேப்டனாக இருக்கும் நிலையில், வேறு வீரரை பி.சி.சி.ஐ பரிசீலிக்குமா? என்றால், நிச்சயம் ஆம் என்று தான் கூற வேண்டும். அவருக்கு பேக்-அப் வீரராகவோ அல்லது அவரை விட சிறந்த வீரரையோ தேர்வு செய்யலாம்.
ரோகிக்குப் பிறகு இந்திய கேப்டன் யார்? என்கிற பேச்சு அடிபடும் போதெல்லாம் ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இருப்பார்கள். ஆனால், ரிஷப் பண்ட்-டுக்கு ஏற்பட்ட விபத்து காயத்தில் இருந்து அவர் மீள இன்னும் சில மாதங்கள் எடுக்கும். காயம் காரணமாக நீண்ட இடைவெளிப்பிறகு தற்போது ஆசியக் கோப்பை அணியில் இணைந்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் ஹர்டிக் பாண்டியா உடன் போட்ட போட்டி போடுவார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரஹ்மானுல்லா குர்பாஸ், தனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஹ்மானுல்லா குர்பாஸ் பேசியது பின்வருமாறு:-
"நம்பிக்கையுடன், அவர் (ஷ்ரேயாஸ் ஐயர்) ஒரு நல்ல கேப்டனாக மாறுவார். ஐ.பி.எல்-லில் ஒரு அணியை (கேகேஆர்) அவர் வழிநடத்துவதால் அவர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார். ஐ.பி.எல் உலகின் மிகப்பெரிய போட்டியாகும். ஐ.பி.எல்.-லில் அவர் ஒரு அணியை வழிநடத்தி வருவதால் உலகின் எந்த அணியையும் அவரால் வழிநடத்த முடியும். அதில் இந்தியாவும் உள்ளது.
இப்போது ரோகித் இருக்கிறார்.இந்தியாவின் கிரிக்கெட் தரம் உயர்ந்துள்ளது. ஐ.பி.எல்-லில் ஷ்ரேயாஸ் ஒரு அணியை வழிநடத்துகிறார் என்றால் அவர் நல்லவர் (இந்திய கேப்டன்சி மெட்டீரியலாக) அங்கு ஐ.பி.எல் தொடரில் அணிகளை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்காத பல வீரர்கள் உள்ளனர். அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதாவது அவர் ஒரு நல்ல கேப்டன். அவர் இந்தியாவுக்கு நல்ல கேப்டனாக இருப்பார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
"அவருக்காக (ஷ்ரேயாஸ்) நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் அணிக்கு வந்துள்ளார். அவர் ஒரு முக்கிய வீரர். அவர் மிகவும் நல்ல வீரர். அதனால்தான் அவர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தகுதியானவர். நாங்கள் கேகேஆர் அணியில் ஒன்றாக விளையாடுகிறோம். அவர் ஒரு நல்ல மனிதர். அவர் ஒரு நல்ல கேப்டன், ஒரு இளம் கேப்டன். அவர் இளமையாகவும் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கிறார்.
இந்திய தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் என்னை விட அனுபவம் வாய்ந்தவர்கள். வீரர்களை எப்படி தேர்வு செய்வது என்பது அவர்களுக்கு தெரியும். இந்தியாவில் ஏராளமான திறமைகள் உள்ளன. ஷ்ரேயாஸ் ஒரு சிறந்த வீரர். அவர் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப்படுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணியில், முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்துள்ளார். அவர் முழு உடற்தகுதியையும் எட்டி விட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியிருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.