இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட். ஒரு வீரராக இந்திய அணி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர், தனது ஓய்வுக்குப் பின், பயிற்சியாளராக உருவெடுத்து இந்திய ஜூனியர் அணியை சர்வதேச அளவில் பல கோப்பையை வெல்ல உதவினார். இவரது தலைமையிலான யு-19 அணி 2018-ல் உலகக் கோப்பை வென்றது.
இந்திய சீனியர் அணி உலகக் கோப்பை தேடலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை நல்ல வாய்ப்பாக கருதினார். ஆனால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் கோட்டை விட்டது.
விட்ட கோப்பையை பிடிக்க முயற்சி போட்ட டிராவிட், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருந்தார். தற்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதிவில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டிராவிட், ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிர் வரும் சீசனில் பயிற்சி அளிக்க இருக்கிறார்.
இந்நிலையில், ராகுல் டிராவிட் பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் சண்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் டிராவிட் தனது காரில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட கன்னிகாம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த சரக்கு ஆட்டோ, டிராவிட் கார் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன் பகுதி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த டிராவிட் கீழே இறங்கி வந்து, ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியில் மக்கள் அந்த இடத்தில் கூட்டம் கூடினர். இதையடுத்து டிராவிட், ஆட்டோ டிரைவரிடம் செல்போன் எண் மற்றும் வீட்டு முகவரி தொடர்பான விவரங்களை பெற்று கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து எந்த புகாரும் அவர் போலீசில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், டிராவிட் கார் விபத்துக்குள்ளானது மற்றும் ஆட்டோ டிரைவரிடம் அவர் வாக்குவாதம் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ஐகிரவுண்டு போலீசார் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.