#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்

#Metoo – வில் ராகுல் டிராவிட்டின் பெயர் அடிபடுகிறது என்றவுடன் நமக்கு உண்டான பீதியை சொல்லிமாளாது. ஆனால், அந்த வீடியோவை பார்த்த பிறகு தான் நிம்மதி பெருமூச்சு வந்தது.

மீ டூ எனும் ஹேஷ்டேக் ஒவ்வொரு நாளும் பலரது பீதியை விலை உயர்ந்த பொருட்களான பெட்ரோல், டீசல் கொண்டு ஏற்றிக் கொண்டிருக்கிறது.

என்னது இவரா!?, என்னது அவரா!? ஐயோ இவருமா!? என்றே இப்போதெல்லாம் நம் உதடுகள் வார்த்தைகளை உச்சரிக்கிறது. அதற்கு காரணம் #Metoo.

பல பெண்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை மிக தைரியமாக இந்த ஹேஷ் டேக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தளங்களில் உள்ளோரும் இதில் சிக்குவதால், ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

ஆனால், உண்மையோ, பொய்யோ… இவ்வளவு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்களா என்று நினைக்கும் போது தான் வேதனையாக உள்ளது.

சாமானியர்களாகிய நம்மைப் போன்றோர், அடுத்து யார் சிக்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பில் தான் இருக்கின்றோம். நம் வீட்டில் உள்ள பெண்களுக்கு அப்படியொரு தொல்லை நிகழும் போதுதான் அதன் வலி நமக்கு புரியும்.

அதேசமயம், இதை பயன்படுத்தி சில பெண்கள் தங்களுக்கு பிடிக்காத ஆண்கள் பற்றி அவதூறு பரப்பினால் என்ன செய்வது? என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது, மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் புகார் கொடுத்திருக்கிறார். நேற்று கூட, இயக்குனர் சுசி கணேசன் மீது ஒரு பெண் இயக்குனர் பாலியல் புகார் வாசிக்க, அந்த பெண் மீது வழக்கு தொடரப்படும் என சுசி கணேசன் மிக ரௌத்திரமாக தனது முகநூலில் கூறியிருந்தார்.

‘நான் தவறு செய்திருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்’ என வைரமுத்து சொல்ல, ராதாரவியோ இதனை ‘ஜஸ்ட் லைக் தட்’ என கடந்து செல்ல யார் உண்மை சொல்கிறார், யார் பொய் சொல்கிறார் என்பதே புரியவில்லை.

சில பிரபலங்களோ பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டு வருகின்றனர். இருப்பினும், தினம் தினம் புகார்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அப்படியொரு செய்தி தான் நமது காதுகளுக்கு எட்டியது. அது நம்ம கிரிக்கெட் ‘சுவர்’ ராகுல் டிராவிட் பற்றியது. ஆனால், #Metoo விவகாரத்தில் நெகட்டிவாக அல்ல… பாசிட்டிவாக.

நம்பிக்கை நட்சத்திரமாக டிராவிட் ஜோலித்து கொண்டிருந்த காலத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

பேட்டி முடிந்த‌தும் அந்த அறையில் யாரும் இல்லாத‌ நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, டிராவிட்டை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி நெருங்கி வந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த டிராவிட், அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.

அதன் பின்னர் தான், அவை அனைத்தும் விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது தெரிய வந்தது.

ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வார்கள் என, இந்த மீ டூ பாடம் கற்பித்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படியும் சில ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் அழுத்தமாக உணர்த்தியுள்ளது.

கெத்து சார் நீங்க!.

அந்த வீடியோ இதோ,

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close