இந்தியக் கிரிக்கெட்டில் கவாஸ்கர், வெங்சர்க்கார், கபில்தேவ், அமர்நாத் ஆகியோருக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் திறமையான பேட்ஸ்மேன்களைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் இந்திய அணிக்குக் கிடைத்தவர்தான் ராகுல் டிராவிட்.
உலகின் எந்த அணியின் வேகப்பந்துவீச்சையும் அனாயசமாக எதிர்த்து நின்று விளையாடக் கூடியவர் ராகுல் டிராவிட் மட்டும்தான். தோற்றுவிடும் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோதெல்லாம் களமிறங்கி அணியை சுவர்போல் காத்தவர்.
அதிகம் அலட்டிக் கொள்ளாத தனது எளிமையான குணத்துக்காக ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுபவர் டிராவிட்.
சமீபத்தில் நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்து இருந்தது.
ரூ.125 கோடி பரிசுத்தொகையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடி, தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள பயிற்சியாளர்களான பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கு ரூ.2.5 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி தரப்பில் பேசுகையில், விக்ரம் ரத்தோர், பராஸ் ஆம்ரே, டி திலீப் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகையே தனக்கும் போதுமானது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார். அவரின் உணர்வை மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பிரித்வி ஷா தலைமையில் கைப்பற்றியது.
அந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். அப்போதும் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.20 லட்சமும், ராகுல் டிராவிட்டுக்கு மட்டும் ரூ.50 லட்சமும் பிசிசிஐ தரப்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
அப்போது டிராவிட், பரிசு தொகையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என பி.சி.சி.ஐ.யை வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து அவர் உட்பட பயிற்சியாளர்கள் குழுவினர் அனைவருக்கும் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை சமமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“