8-வது சீசன் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 3 தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தாளராக கலந்து கொண்டார். போட்டிக்கு பின் அவர் பேசுகையில், இங்கே எனக்கு சில சிறந்த நினைவுகள் இருக்கிறது. உண்மையில் இங்கேதான் என்னுடைய வளரும் இளம் வயதில் லீக் போட்டிகளில் விளையாடினேன். அப்போது சேப்பாக்கம் மைதானம் வித்தியாசமாக இருந்தது. அனைத்தும் கான்கிரீட் ஸ்டாண்ட்களாக இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளதை பார்ப்பது அழகாக இருக்கிறது. இங்கே லீக் கிரிக்கெட்டை விளையாடியது சிறப்பாக இருந்தது.
அதேபோல சர்வதேச கிரிக்கெட்டிலும் இங்கே சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் நம் நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவை கொடுக்க கூடியவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை விரும்பக் கூடியவர்கள். எனவே சேப்பாக்கத்தில் நான் விருப்பத்துடன் விளையாடினேன்.
என்னுடைய 10,000 ரன்களை இந்த மைதானத்தில் தான் அடித்தேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இங்கே மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளை பெற்றோம். அது மிகவும் ஸ்பெஷலான தருணம்" என்றார் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“