Rahul Dravid Return as Rajasthan Royals Head Coach: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவர் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட். இவரது தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று 10 ஆண்டு ஐ.சி.சி கோப்பை தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த தொடருடன் டிராவிட் தனது தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், ராகுல் டிராவிட் ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது. ஐ.பி.எல் 2025 சீசனுக்கு முன்னதாக தனது இந்தியப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டிராவிட் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகத் திரும்புவார் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் மற்றும் டிராவிட் இடையே பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராகுல் டிராவிட் ஐ.பி.எல் 2025 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) தலைமை பயிற்சியாளராக திரும்ப உள்ளார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது. ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, டிராவிட் சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், மெகா ஏலத்திற்கு முன்னதாக வீரர்களை தக்கவைத்துக்கொள்வது குறித்து ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தையை அணி நிர்வாகத்துடன் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டைப் பொறுத்தவரையில், அவருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. அவர் ஐ.பி.எல் 2012 மற்றும் 2013 சீசன்களில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் 2014 மற்றும் 2015 சீசன்களில் அந்த அணியின் இயக்குநராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றியுள்ளார்.
2016 இல், டிராவிட் டெல்லி டேர்டெவில்சுக்கு (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) மாறினார். இதன்பிறகு, அவர் 2019 இல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார். 2021 இல், அவர் இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இப்போதைய கேப்டன் சஞ்சு சாம்சனுடனும் ராகுல் டிராவிட் நீண்டகாலமாக பணிபுரிந்துள்ளர். 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சி அளித்தபோது, சஞ்சு சாம்சன் டிராவிட் கண்காணிப்பில் வளர்ந்தார் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
டிராவிட்டின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் ராஜஸ்தான் அணி ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளது. முன்னாள் இந்திய தேர்வாளரான ரத்தோர், 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக ஆவதற்கு முன்பு என்.சி.ஏ-வில் டிராவிட்டின் பயிற்சியாளர் குழுவில் இருந்தார்.
ஐ.பி.எல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிராவிட் பொறுப்பேற்றாலும், 2021 முதல் கிரிக்கெட் இயக்குநராக இருக்கும் குமார் சங்கக்கார, எஸ்.ஏ20-யில் பார்ல் ராயல்ஸ், சி.பி.எல்-லில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் மற்ற லீக்குகளில் உள்ள தங்கள் அணிகளை வழிநடத்த உள்ளார்.
ஐ.பி.எல் தொடரின் தொடக்க சீசனில், அதாவது 2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பிறகு ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. 2022-ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அந்த அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. கடந்த 2023 சீசனில் ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப்க்கு முன்னேறாமல் வெளியேறியது. கடந்த சீசனில் தகுதிச் சுற்று 2 இல் நாக் அவுட் செய்யப்பட்டனர். அவர்களின் கோப்பைக்கான தேடல் தொடரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி டிராவிட் வைப்பாரா என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.