U-19 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு, தனக்கு மட்டும் அதிக அளவிலான பரிசுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளதை டிராவிட் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில், இந்தியா அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நான்காவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.
U-19 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இப்போட்டிக்கு முன்பு வரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மட்டுமே அதிகபட்சமாக தலா மூன்று முறை கோப்பையை வென்றிருந்தன. தற்போது 4-வது முறையாக இந்தியா உலகக் கோப்பையை வென்று, U-19 பிரிவில் அதிக முறை உலகக் கோப்பை வென்ற முதல் அணி என்ற புதிய சாதனையை படைத்தது. இதனால் இந்திய அணிக்கும், குறிப்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு பாராட்டுகள் குவிந்தது.
வெற்றிக்கு பரிசாக இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை அறிவித்தது பிசிசிஐ. இதுதவிர, பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, ஃபீல்டிங் பயிற்சியாளர் அபே ஷர்மா, பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் உள்ளிட்ட மற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.20 லட்சமும், வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு மட்டும் அதிக அளவிலான பரிசுத் தொகை கொடுக்கப்பட்டுள்ளதை டிராவிட் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அணியின் வெற்றிக்கு அனைவரும் கடுமையாக உழைத்தோம். மற்ற ஊழியர்களுக்கும் சரிசம அளவில் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அவர் தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "இந்தியாவில் குரு - சிஷ்யர் வழக்கம் முறை பற்றி அனைவருக்கும் தெரியும். இங்கு குருவுக்கு தான் தட்சணை அதிகமாக கொடுக்கப்படும். இதனால் தான் டிராவிட்டிற்கு அதிக தொகை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை" என்றார்.