Rahul-dravid: Ashish-nehra | indian-cricket-team: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ நேற்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், டிராவிட் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரின் பதவிக்காலத்தையும் நீட்டித்தது.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா டி20 ஃபார்மெட்டுக்கு மட்டும் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் வாய்ப்பை நிராகரித்ததார். இதனால், இந்திய கிரிக்கெட் அணிக்கு 3 ஃபார்மெட்டுகளிலும் பயிற்சியாளராக இருந்து வரும் டிராவிட், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை வரை தலைமைப் பயிற்சியாளராகத் தொடர வேண்டும் என பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகியது.
உண்மையில் பி.சி.சி.ஐ நெஹ்ராவை அணுகியதாகவும், ஆனால் அவர் தான், ஐ.பி.எல் தொடருக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நெஹ்ரா இந்திய டி20 அணி பயிற்சியாளர் பதவியை மறுத்ததற்கான இன்னும் சில காரணங்களை இங்கு பார்க்கலாம்.
ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இந்திய தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. ஏனெனில் அவர் "2025 வரை குஜராத் அணி உடனான தனது ஒப்பந்தத்தை மதிக்க விரும்புகிறார்" என்று முன்பு எப்போதும் கூறி வருகிறார்.
நெஹ்ரா தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். ஏனென்றால், இந்திய பயிற்சியாளராக இருப்பது விரிவான பயணத்தை உள்ளடக்கியது. இரண்டரை மாத ஐ.பி.எல் தொடர் பயிற்சியை மட்டுமே அவர் தற்போது எதிர்பார்க்கிறார். இருப்பினும், எதிர்காலத்தில் சரியான நேரத்தில், அவர் இந்திய அணியின் ஒயிட் -பால் பயிற்சியாளராக கருதலாம்.
மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், டிராவிட்டின் இந்திய அணியுடனான ஒப்பந்தம் இன்னும் எத்தனை ஆண்டுகள் என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், டி20 உலகக் கோப்பை 2024 முடியும் வரை டிராவிட் அணியுடன் இணைந்து செயல்படுவார் எனத் தெரிகிறது. இந்த போட்டிக்குப் பிறகு அவரது எதிர்கால பயணம் குறித்து முடிவெடுக்கலாம்.
நெஹ்ராவை பொறுத்தவரை, குஜராத் டைட்டன்ஸ் உடனான அவரது தற்போதைய ஒப்பந்தம் 2025 வரை உள்ளது. அந்த அணி ஏற்கனவே அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸிடம் இழந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நேரத்தில் அவர்களின் தேவைக்கேற்ப பயிற்சியாளரை விடுவிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். நெஹ்ராவுக்கும் அப்படியொரு முடிவை எடுக்க கட்டாயப்படுத்தும் எண்ணம் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.