T20 World Cup 2024 | Pakistan | Indian Cricket Team: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஆனால், இந்தியாவின் பரம போட்டியாளரான பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் நிலவுகிறது. நடப்பு தொடரில் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகளுடன் ஏ பிரிவில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. அந்த அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 2 புள்ளிகள் மற்றும் +0.191 என்கிற நெட் ரன்ரேட்டுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி சூப்பர் 8-க்கு தகுதி பெற மீதமுள்ள ஒரு போட்டியில் பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வேண்டும். வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அதன் கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் நல்ல நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும், அவர்கள் அயர்லாந்து அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்திட வேண்டும் என பிராத்திக்க வேண்டும்.
இந்த சூழலில் தான், பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் மோதும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் நிலவுகிறது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு மழைப் பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லாடர்ஹில் பகுதியில் போட்டி நாளன்று 80% மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் ஈரப்பதம் 69% ஆகவும், காற்று மணிக்கு 22 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
ஒருவேளை, மழை காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். அதனால், ஏற்கனவே 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா அணி வெள்ளிக்கிழமை நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றால் கூட சூப்பர் 8-க்கு தகுதி பெறலாம். அயர்லாந்தை அமெரிக்கா வீழ்த்தும் பட்சத்தில் பாகிஸ்தானின் சூப்பர் 8 கனவு நொறுங்கி விடும்.
இந்தியா அரைஇறுதிக்குள் நுழையும் சான்ஸ் அதிகம்
இந்த தொடரில் ஏற்கனவே சூப்பர் 8-க்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நடப்பு தொடரில் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய இந்தியா மீதமுள்ள ஒரு போட்டியில் கனடாவுடன் வருகிற சனிக்கிழமை (ஜூன் 15) மோத உள்ளது. இந்தப் போட்டியிலும் இந்தியா வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்கான ஏ பிரிவில் இருந்து இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், சி1 இடத்துக்கு தகுதி பெறும் அணியுடன் இந்தியா வருகிற 20 தேதியும், டி2 இடத்துக்கு தகுதி பெறும் அணியுடன் இந்தியா வருகிற 22 ஆம் தேதியும் மோத உள்ளது.
மேலும், பி- பிரிவில் இருந்து ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால், அந்த அணியுடன் இந்தியா மோதும் போட்டி வருகிற ஜூன் 24 ஆம் தேதி செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
ஆனால், சூப்பர் 8-ல் மீதமுள்ள 2 போட்டிகளில் இந்திய அணி பலம் குறைவாக இருக்கும் அணிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதாவது, சி1 மற்றும் டி2 இடத்துக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதி பெறக் கூடும். அதனால், இந்த 3 போட்டிகளில் இரண்டின் முடிவுகள் இந்தியாவுக்கு சாதகமாக வரும் அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீசை இந்தியா எதிர்கொண்டால், இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம். இருப்பினும், ஆப்கானிஸ்தானுடன் மோதவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை இந்தியா எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதும் இருப்பதால், அந்தப் போட்டியில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனாலும், சூப்பர் 8 சுற்றில் நடக்கும் 3 போட்டிகளில் 2ல் இந்தியா வெற்றி பெற்றால் கூட, இந்தியாவுக்கான அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். அதனால், இம்முறை இந்திய அணி அரைஇறுதிக்கு எளிதில் முன்னேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.