Khelo India Youth Games | Ramanathapuram: 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த ஆண்டு டெமோ விளையாட்டாக இடம்பெற உள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்
போட்டிகளுக்கான விழிப்புணர்வு பேரணியை தொடங்கினார். இதன்பிறகு பேசிய அவர், "கேலோ இந்தியா விளையாட்டு தேசிய அளவில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டாக இருந்து வருகின்றன. இத்தகைய விளையாட்டானது தேசிய அளவில் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் துவங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இப்போட்டிகளை சிறப்பாக நடத்திட அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இப்போடியானது ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெறுகின்றன. இதன் முன்னேற்பாடாக அனைத்து மாவட்டங்களிலும் கேலோ விளையாட்டு போட்டிகள் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 6வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்த சிறப்புகள் கொண்ட குறும்படம் வாகனம் மூலம் பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பொதுவாக ராமநாதபுரம் மாவட்டம், விளையாட்டுத்துறையில் ஆர்வம் மிகுந்த மாவட்டமாக இருந்து வருகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் ஆர்வம் இருக்கும் அந்த ஆர்வம் என்பது விளையாட்டில் இருக்கும் பொழுது பல்வேறு பயன்களை உருவாக்குகின்றன குறிப்பாக ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் விளையாட்டு என்பது மிகப் பயனுள்ளதாகவும் அதே போல் விளையாட்டு உயர்கல்வி வரை பயனளிக்க உதவுவதுடன் தலை சிறந்த சாதனையாளராகவும் உருவாக உதவிடும். இளைஞர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி தேசிய அளவில் பங்கேற்று வரும் விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்தி இளைஞர்களுக்கு ஊக்கத்தை அழித்து வருகின்றன இது போன்ற நல்ல
வாய்ப்புகளை இன்றைய இளம்தலைமுறையினர் ஆர்வம் காட்டி தங்களுக்கு எந்த வகையான விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ளதோ அதில் அதிக கவனம் எடுத்து செயல்பட வேண்டும் அதற்கு அரசு உறுதுணையாக இருக்கின்றன உங்களால் கிடைக்கும் வெற்றி உங்களுக்கு மட்டும் இன்றி நாட்டிற்கும் பெருமை தேடி தரக்கூடிய ஒன்றாக இருக்கும் எனவே அனைவரும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் என்ற நிலையை மறந்து தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் வெற்றி நிச்சயம் பெறலாம்." என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையிலான கட்டுரை போட்டிகள், பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்று மாவட்ட ஆட்சியர் திரு.பா.விஷ்ணு சந்திரன் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் காந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன், உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, கேலோ இந்தியா ஜடோ பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.