Pakistan | worldcup: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் அதன் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதன்பிறகு, அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
பயிற்சி ஆட்டத்தில் தோல்வி
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சதம் விளாசிய முகமது ரிஸ்வான் 103 ரன்களும், அரைசதம் அடித்த பாபர் அசாம் 80 ரன்களும், சவுத் ஷகீல் 75 ரன்களும் எடுத்தனர். 346 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 43.4 வது ஓவரிலே இலக்கை எட்டிப் பிடித்தது.
/indian-express-tamil/media/post_attachments/fd0dde46-319.jpg)
நியூசிலாந்து அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரன் 97 ரன்களை எடுத்தார். அரைசதம் அடித்த கேன் வில்லியம்சன் 54 ரன்களும், டேரில் மிட்செல் 59 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தை முடித்து வைத்த மார்க் சாப்மேன் 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.
பாக்., அணிக்கு பாடம் எடுத்த ரமீஸ் ராஜா
இந்நிலையில், கடந்த ஆண்டு வரை பி.சி.பி தலைவராக இருந்த முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை தனக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும், இந்தியாவில் உள்ள ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப பாகிஸ்தான் பேட்டிங் செய்ய வேண்டும், அவர்கள் “400” ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/98a3e62c-b0e.jpg)
"இது பயிற்சி போட்டி என்று எனக்குத் தெரியும். ஆனால் வெற்றி எப்போதும் வெற்றியாகப் பார்க்கப்படும். மேலும் வெற்றி பெறுவது ஒரு பழக்கமாகிவிடும். ஆனால் பாகிஸ்தான் இப்போது தோற்க பழக்கமாகிவிட்டதாக உணர்கிறேன். முதலில் அவர்கள் ஆசிய கோப்பையில் தோற்றனர், இப்போது இங்கே தோல்வியுற்றுள்ளனர்.
பாகிஸ்தான் 345 ரன்களை குவித்தது, அது ஒரு சிறந்த ரன் சேஸ். இந்தியாவில் இதுபோன்ற ஆடுகளங்களைத் தான் பெறுவீர்கள். உங்கள் பந்துவீச்சு இதுபோன்று தவறாக இருந்தால் நீங்கள் 400 ரன்கள் எடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டும். ரிஸ்க்குகளை எடுக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்வதில்லை. நாங்கள் முதல் 10-15 ஓவர்கள் வரை தடுத்து விளையாடுவோம், பின்னர் கியர்களை மாற்றுவோம்.
/indian-express-tamil/media/post_attachments/a9NUffGj1DbMw9WJvtdf.jpg)
வெறும் நான்கு ஓவர்கள் வீசிய ஹரிஸ் ரவூப் 36 ரன்களை விட்டுக்கொடுத்தார். 9 மாத இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய ஹசன் அலி, தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் கொண்டிருந்தார். ஆனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் முன்னேறும்போது ரன்களைக் கட்டுப்படுத்துவதில் சிரமப்பட்டார்." என்று ரமீஸ் ராஜா கூறினார்.
இந்தப் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பந்தில் ஹரிஸ் ரவூப் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பாகிஸ்தான் நிர்வாகம் வாய்ப்பளித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“