Ranji Trophy HIGHLIGHTS, Day 3 – Tamil Nadu vs Saurashtra Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்தத் தொடரில் கடைசி குரூப் போட்டிகள் நேற்று முன்தினம் (ஜனவரி 24 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், எலைட் குரூப் பி-யில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 66 ரன்களும், அரைசதம் விளாசிய விஜய் சங்கர், ஷாருக் கான் 53 மற்றும் 50 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் சாய் சுதர்சன் 45 ரன்களும், பாபா இந்திரஜித் 45 ரன்களும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணி தரப்பில் யுவராஜ்சிங் தோடியா 4 விக்கெட்டுகளையும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிராக் ஜானி 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடிய சவுராஷ்டிரா அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து. அந்த அணியில் அதிகபட்சமாக சிராக் ஜானி 49 ரன்கள் எடுத்தார். அபாரமாக பந்து வீசிய தமிழ்நாடு அணியில் எஸ் அஜித் ராம் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் விக்கெட்டுகளையும், அபராஜித், மற்றும் கேப்டன் பிரதோஷ் பால் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன்பிறகு 2வது இன்னிங்சில் களமாடிய தமிழ்நாடு அணி 133 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 37 ரன்கள் எடுத்தார். சுழலில் மிரட்டி எடுத்த கேப்டன் ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், தர்மேந்திரசிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்

குறிப்பாக, 17 ஓவர்களுக்கு மேல் வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்த கேப்டன் ஜடேஜா சமீபத்தில் தான் உடற்தகுதி பெற்று ரஞ்சி போட்டிக்கு திரும்பினார். சொல்லப்போனால், இதுதான் அவர் களமாடும் முதல் ரஞ்சி போட்டி (காயத்தில் இருந்து மீண்ட பிறகு) ஆகும். அதனால், அவருக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடிப்பது நிச்சயம் என்பது போல் தெரிகிறது.
இன்று 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்துள்ள சவுராஷ்டிரா அணி 4 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியை விட தமிழ்நாடு அணி 262 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இரு அணியில் விளையாடும் லெவன்
சவுராஷ்டிரா: ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), சிராக் ஜானி, ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வசவதா, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சமர்த் வியாஸ், பிரேராக் மங்கட், தர்மேந்திரசிங் ஜடேஜா, சேத்தன் சகாரியா, யுவராஜ்சிங் தோடியா, ஜெய் கோஹில்
தமிழ்நாடு:
சாய் சுதர்சன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபராஜித், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால் (கேப்டன்), விஜய் சங்கர், ஷாருக் கான், எஸ் அஜித் ராம், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், மணிமாறன் சித்தார்த்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil