88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்நிலையில், கவுகாத்தியில் நேற்று முதல் தொடங்கிய அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன் மும்பை அணி தொடக்க நாளில் 90 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அந்த அணி இன்று 2ம் நாளில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 687 ரன்கள் குவித்து போட்டியை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
மும்பை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் பிரித்வி ஷா முச்சதம் விளாசி 383 பந்துகளில் 49 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 379 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதேபோல், சதம் அடித்த அஜிங்யா ரஹானே 302 பந்துகளில் 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 191 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்துவரும் அசாம் அணி 2வது ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அரைசதம் விளாசிய ராகுல் ஹசாரிக 60 ரன்களுடனும், ரிஷாவ் தஸ் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முச்சதம் விளாசி மிரட்டிய பிரித்வி ஷா
இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். 107 பந்துகளில் சதம் அடித்த அவர் 235 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். பின்னர் 326 பந்துகளில் முச்சதம் அடித்து மிரட்டினார். அவரின் இந்த அசாத்தியமான பேட்டிங்கின் மூலம் ரஞ்சி கிரிக்கெட் டில் பிரமிக்க வைக்கும் சாதனையைப் படைத்துள்ளார்.
பிரித்வி ஷா 379 ரன்கள் எடுத்ததன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். முதலாவது வீராக 443* ரன்கள் குவித்த பௌசாகேப் நிம்பல்கர் உள்ளார்.
டி20யில் சதம் , லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் விளாசி வீரர்கள் வரிசையில் வீரேந்தர் சேவாக், ரோகித் சர்மா ஆகியோருக்கு பிறகு 3வது வீரராக பிரித்வி ஷா உள்ளார்.
அனைத்து ஃபார்மெட்டுகளிலும் பிரித்வி ஷாவின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்:
முதல் தர கிரிக்கெட்: 51.75 / சராசரி – 83.82 ஸ்ட்ரைக் ரேட்.
லிஸ்ட் ஏ: 52.54 சராசரி / 123.27 ஸ்ட்ரைக் ரேட்.
டி20 – 26.38 சராசரி / 151.67 ஸ்ட்ரைக் ரேட்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil