TN vs ASM, Elite Group B, Ranji Trophy 2022-23 Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்நிலையில், பி -பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - அசாம் அணிகள் மோதிய ஆட்டம் கடந்த செவ்வாய் கிழமை (17 ஆம் தேதி) சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் என் ஜெகதீசன் 125 ரன்களும், பிரதோஷ் பால் 153 ரன்களும், விஜய் சங்கர் 112 ரன்களும் எடுத்தனர். முதல் இன்னிங்சிஸ் முடிவில் தமிழ்நாடு அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 540 ரன்கள் எடுத்தது. அசாம் அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய அசாம் அணி முதல் இன்னிங்சில் 266 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக புர்காயஸ்தா 74 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு தரப்பில் எஸ் அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியார் மற்றும் திரிலோக் நாக் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். தமிழ்நாடு அணி 250 ரன்களுக்கு மேல் முன்னனிலையில் இருந்த நிலையில், ஆட்டத்தில் ஃபாலோ ஆன் அழைப்பை எடுத்தார் கேப்டன் சாய் கிஷோர்.
அதன்படி 2வது இன்னிங்சில் களமாடிய அசாம் அணியில் எந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. அரைசதம் அடித்த ரிஷவ் தாஸ் 58 ரன்கள் எடுத்து இருந்தார். அவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணியில் அஜித் ராம் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். இதேபோல், கேப்டன் சாய் கிஷோர் மற்றும் பாபா அபராஜித் தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ்நாடு 15 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் காலிறுதி வாய்ப்பு சந்தேகம் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.