Tamil Nadu vs Saurashtra, Elite Group B Tamil News: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்தத் தொடரில் கடைசி குரூப் போட்டி இன்று முதல் நடக்கிறது.
இந்நிலையில், எலைட் குரூப் பி-யில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி வருகிற 27 ஆம் தேதி வரை நடக்கிறது. சவுராஷ்டிரா அணியைப் பொறுத்தவரை, அந்த அணி இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என 26 புள்ளிகளுடன் கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. மறுபுறம், தமிழக அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிராவுடன் 15 புள்ளிகள் பெற்று “பி” பிரிவில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் கால்இறுதி வாய்ப்பையும் இழந்து விட்டது. இருப்பினும், இன்று தொடங்கும் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடரில் இருந்து விடை பெற நினைக்கும்.
சவுராஷ்டிராவுக்கு ஜடேஜா வருகை
இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்டுள்ள இந்திய ஆல்-ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணியை இன்று தொடங்கும் கடைசி குரூப் போட்டியில் வழிநடத்துகிறார்.
ஆசிய கோப்பை போட்டியின் போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள மறுவாழ்வு முகவில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்தார். அதன்பிறகு நடந்த எந்த சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் ஜடேஜா விளையாடவில்லை. இருப்பினும், ஜடேஜா அடுத்த மாதம் சொந்த மண்ணில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடருக்கு முன்னதாக அவரின் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து அவரது இடம் உறுதியாகும். இதனால் தனது உடல் தகுதியை சோதித்து பார்ப்பதற்காக ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் களம் இறங்குகிறார். தொடரில் கேப்டனாக செயல்பட்ட ஜெய்தேவ் உனட்கட், புஜாரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் சவுராஷ்டிரா அணியை ஜடேஜா வழிநடத்துகிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ‘100 சதவீதம்’ ஃபிட்டாக இருப்பது தான் போட்டி பொருத்தமாக இருக்கும். மீண்டும் களத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அணியிலும் தனி நபராகவும் நன்றாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்.
எனது முதல் முன்னுரிமை களத்தில் இறங்குவதும், ஃபிட்டாக இருப்பதும் தான். நான் 100 சதவீதம் உடல்தகுதி அடைந்தவுடன், பேட்டிங் அல்லது பந்துவீச்சு என எதுவாக இருந்தாலும், எனது திறமைகளில் அதிகமாக உழைப்பேன். இப்போது, எனது முதல் முன்னுரிமை உடற்தகுதி தான்.” என்று அவர் கூறியுள்ளார்.
டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் சுதர்சன் 45 ரன்களும், பாபா அபராஜித் 45 ரன்களும் எடுத்தனர்.
பாபா இந்திரஜித் 45 ரன்னுடனும், விஜய் சங்கர் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இரு அணியில் விளையாடும் லெவன்
சவுராஷ்டிரா: ஹர்விக் தேசாய் (விக்கெட் கீப்பர்), சிராக் ஜானி, ஷெல்டன் ஜாக்சன், அர்பித் வசவதா, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), சமர்த் வியாஸ், பிரேராக் மங்கட், தர்மேந்திரசிங் ஜடேஜா, சேத்தன் சகாரியா, யுவராஜ்சிங் தோடியா, ஜெய் கோஹில்
தமிழ்நாடு:
சாய் சுதர்சன், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபராஜித், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால் (கேப்டன்), விஜய் சங்கர், ஷாருக் கான், எஸ் அஜித் ராம், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், மணிமாறன் சித்தார்த்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil