Advertisment

'அவரோட முட்டாள் தனமான கருத்துகளை யாரும் மதிப்பதில்லை'! - சூடு பிடிக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர்

தான் கூறுவதை எல்லாம் மக்கள் கவனித்து வருவதாக அவர் நினைக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'அவரோட முட்டாள் தனமான கருத்துகளை யாரும் மதிப்பதில்லை'! - சூடு பிடிக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர்

Adil Rashid comment over Michael vaughan

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே வரும் ஆகஸ்ட் 1ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட பட்டியலை இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவித்தது. அதில், டிசம்பர் 2016ம் ஆண்டுக்குப் பிறகு, அடில் ரஷீத் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

'சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தனக்கு ஈடுபாடு இல்லை' என்று யார்க்‌ஷயர் அணியுடன் குறைந்த ஓவர் கிரிக்கெட் ஒப்பந்தம் செய்து கொண்டு ரஷீத் விளையாடி வந்தார். இரண்டு ஆண்டு காலமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே இல்லை. இந்நிலையில் இந்தியா போன்ற ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட் பேட்டிங் வரிசைக்கு எதிராக, அடில் ரஷீத்துக்கு திரும்பவும் வாய்ப்பளித்திருப்பது முட்டாள்தனமானது என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.

குறிப்பாக, இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்த முடிவை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவர், "4 நாள் கிரிக்கெட் ஆடாதவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நாம் தேர்வு செய்துள்ளோம்!. அவர் சிறப்பாக ஆடுவாரா மாட்டாரா என்பதை விட்டுத்தள்ளுவோம், இந்த முடிவு கேலிக்குரியது" என்று விமர்சித்து இருந்தார்.

இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எட் ஸ்மித், குறைந்த ஓவர் கிரிக்கெட் ஃபார்மை வைத்து அடில் ரஷீத்தைத் தேர்வு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்துகள் முட்டாள் தனமானவை.. அதை கண்டுகொள்ளத் தேவையில்லை என அடில் ரஷீத் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து ரஷீத் அளித்துள்ள பேட்டியில், "அவர் ஏதேதோ நிறைய பேசிக் கொண்டிருக்கிறார். தான் கூறுவதை எல்லாம் மக்கள் கவனித்து வருவதாக அவர் நினைக்கிறார். ஆனால், அவரை யாருமே கண்டு கொள்வதில்லை என்றே நான் நினைக்கிறேன். அவரது கருத்துகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

நான் சிகப்பு - பந்து கிரிக்கெட்டில் விளையாடப் போவதில்லை என்று கூறிய போதும், இப்படித் தான் முட்டாள் தனமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். பலரும் அவர் சொல்லும் கருத்துகளை கேட்பது கூட இல்லை.

நான் மைக்கேல் வாகனின் தலைமையிலும் விளையாடி இருக்கிறேன்; சக வீரராகவும் விளையாடி இருக்கிறேன். அவருக்கு போர் அடிப்பதால் தான் இப்படி பேசி வருகிறார். தவிர, இதை விட சிறப்பாக விமர்சிக்கவும் அவருக்கு தெரியாது." என்று ரஷீத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், அலைஸ்டர் குக், சாம் குர்ரன், கீட்டன் ஜெனிங்ஸ், டேவிட் மலான், ஜேமி போர்ட்டர், அடில் ரஷீத், பென் ஸ்டோக்ஸ்.

Michael Vaughan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment