4 பந்துகளில் 4 விக்கெட்! மலிங்காவுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட மெகா சாதனை! (வீடியோ)

விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்ம்

By: February 25, 2019, 5:55:02 PM

சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ரஷித் கான் அர்மான்… வளர்ந்து விட்ட ஒரு ஆப்கான் ஸ்பின் மெஜீசியன். உலக பேட்ஸ்மேன்களை தனது லெக் பிரேக் கூக்ளி பந்துகளால் பாடுபடுத்திக் கொண்டிருக்கிறார். விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்ம். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக செய்துக் கொண்டிருப்பவர் இந்திய கேப்டன் விராட் கோலி. அந்த லிஸ்டில் ரஷித் கானையும் சேர்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகின்றன. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி உத்தரகாண்டில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப்.24) நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, முகமது நபி 36 பந்துகளில் 81 ரன்களை விளாசினார்.

அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், டி-20 தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் தொடரை முழுவதுமாக வென்றது.

ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

முன்னதாக, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா 2007ம் ஆண்டு நடந்த, 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவை கலங்கடித்தார். அதன்பிறகு, 12 வருடங்கள் கழித்து, ரஷித் கான் இச்சாதனையை புரிந்துள்ளார். அதுவும் டி20 போட்டியில்.

அந்த வகையில் பார்க்கையில், டி-20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் ரஷித் கான் தான்.

கெவின் ஓ’பிரைன்,

ஜார்ஜ் டாக்ரெல்,

ஷேன் கெட்கேட்,

சிமி சிங்

ஆகிய நான்கு வீரர்களும், ரஷித்தின் வேட்டைக்கு பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Rashid khan 4 wickets in 4 balls vs ireland

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X