இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஐதரபாத் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் ரஷித் கானை பற்றி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
19 வயதில் ஆப்கானிஸ்தான் அணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர் ரஷித் கான் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இறுதிக்கட்டதை நெருங்கி உள்ள ஐபிஎல் 2018 லீக் தொடரில் ஐதரபாத் அணியில் ரஷித் கான் இடம்பெற்றுள்ளார்.
சுழற்பந்து வீரரான ரஷித்கான் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றிருந்தார். நேற்று நடந்த நாக்-அவுட் சுற்றில் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தாவை, ரஷீத் கான் தனது சூழலில் விழ வைத்தார்.
நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா அணியில் முக்கியமான 3 விக்கெட்டுக்களை ரஷித்கான் எடுத்தது, ஐதரபாத் அணிக்கே பெரும் பலத்தை சேர்த்தது. ரஷித்கானின் பந்து வீச்சை பலரும் பாராட்டினர். இந்நிலையில், ரஷித்கானின் ஆட்டத்தை கண்டு வியந்த சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
சச்சின் கூறியிருப்பது, “ ரஷித் கான் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளர். ஆனால், தற்போது அவர் டி20 போட்டிகளில் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று சொல்வதற்கு எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லை. அதேபோல், அவரிடம் நல்ல பேட்டிங் திறனும் உள்ளது” என்று கூறியுள்ளார்.