இன்றைய கிரிக்கெட் உலகில், எதிரணிகளை மிரட்டி வரும் ஸ்பின்னர் ரஷித் கான். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் லெக் ஸ்பின்னரான ரஷித் பந்துவீச்சுக்கு அஞ்சாத பேட்ஸ்மேன்களே கிடையாது. சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், வங்கதேச லீக் என அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார்.
மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ரஷித் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் லீக் போட்டியில் ரஷித் கான் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஷித் கானின் தந்தை நேற்று திடீரென காலமானதையடுத்து மிகுந்த வேதனையுடன் அந்த செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்தார்
அதில், "இன்று, நான் என் வாழ்க்கையில் முக்கியமான ஒரு மனிதரை இழந்து விட்டேன். என் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய என் தந்தை இனி இல்லை. நான் மனவலிமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் (என் தந்தை) எப்போதும் என்னிடம் கேட்பது ஏன் என தெரிந்து விட்டது. இன்று உங்கள் இழப்பை நான் தாங்கிக்கொள்ள எனக்கு மனவலிமை அவசியம் தேவை. நான் உங்களை மிஸ் செய்கிறேன்" என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமின்றி, இன்று நடந்த டி20 ஆட்டத்திலும் கலந்து கொண்ட ரஷித், சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது அடிலைட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
தந்தை இறந்த துக்கத்திலும், தனது பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தனது அணியையும் வெற்றிப் பெற வைத்திருக்கும் ரஷித் கானுக்கு சமூக தளங்களில் பாராட்டுகளும், ஆறுதல்களும் குவிந்து வருகிறது.
நீங்க தைரியமா இருக்கணும் ரஷித்! கமான்!