ரஷித் கான் உலக கிரிக்கெட்டிற்கு கிடைத்த சொத்து என்று பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று உரையாற்றும் போது புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த வாரம் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகும். ஏனெனில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கிய பின், அந்த அணி விளையாடிய முதல் டெஸ்ட் அது தான். அதுவும், முதன்முதலாக இந்தியாவுடன் விளையாட விரும்புகிறோம் என வேண்டுகோள் விடுத்து, இந்தியாவுடன் விளையாடியது ஆப்கானிஸ்தான். ஏனெனில், ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ பல உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்துவருகிறது. டெஸ்ட் அந்தஸ்து வழங்குவதிலும், இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவித்தது.
அந்த டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றாலும், இந்திய பொறுப்பு கேப்டன் ரஹானே, பரிசளிப்பு நிகழ்வின் போது, ஆப்கன் வீரர்கள் அனைவரையும் அழைத்து, அவர்கள் கைகளில் கோப்பையை கொடுத்தார். இந்திய வீரர்களுடன் இணைந்து ஆப்கன் வீரர்களும் கோப்பையுடன் போஸ் கொடுத்தனர்.
இது உலகளவில் வைரல் ஆனது. பால் டேம்பரிங் போன்ற விஷயங்களில் சிக்கி ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகள் நன்பெயரை இழந்து வரும் நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் மாண்பு கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு, பெங்களூருவில் ஒரு சரித்திர நிகழ்வு அரங்கேறியது. ஆம், இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே நடந்த டெஸ்ட் போட்டியை பற்றி பேசுகிறேன். அவர்கள் இந்தியாவுக்கு எதிராக தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். ரஷித் கான் உலக கிரிக்கெட்டுக்கு கிடைத்த சொத்து. ஐபிஎல்-லிலும் அவர் சிறப்பாக விளையாடினார்.
வெற்றி பெற்றவுடன் ஆப்கன் வீரர்களையும் அழைத்து அவர்களுடன் இணைந்து இந்திய அணி புகைப்படம் எடுத்துக் கொண்டது என்பது ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை வெளிக்காட்டுகிறது. சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விளையாட்டு என்பது மிகப்பெரிய வழியாகும், நமது இளைஞர்களின் திறனை வெளிப்படுத்தவும் இது உதவுகிறது" என்றார்.