நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 164 என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ 43 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தாலும், இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது.
முன்னதாக, முதல் இன்னிங்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவதூத் படிக்கல் தனது அறிமுக ஆட்டத்தில் 56 ரன்களும் ஏபி டிவில்லியர்ஸ் 51 ரன்கள் என மாறி மாறி அரைசதம் அடிக்க 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்து தொடரின் முதல் வெற்றியை ருசித்துள்ளது.
சிக்கலை ஏற்படுத்திய காயம்!
சன்ரைசர்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 16வது ஓவரை சிவம் துபே வீசினார். ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட, அபிஷேக் ஷர்மா இரண்டாவது ரன் எடுக்க ஓடும்போது, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. ஷர்மாவும், ரஷித் கானும் ஒரே வரிசையில் ஓடி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதில் ரஷித் கான் தலையில் பலத்த அடிபட, களத்திலேயே சுருண்டு விழுந்தார். வலியில் சில நொடிகள் அவர் தரையிலேயே படுக்க, உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டது. எனினும் பெரிய அளவில் காயங்கள் இல்லாததால், உடனே ஆட்டத்துக்கு திரும்பினார் ரஷித்.
இதற்கிடையே, உமேஷ் யாதவின் ராக்கெட் கையில் ஷர்மா அடித்த பந்து சிக்க, உடனடியாக ரன் அவுட் செய்யப்பட்டார் ஷர்மா. நேற்றைய போட்டியில் ரஷித்துக்கு மட்டும் காயம் ஏற்படவில்லை. இதே சன்ரைசர்ஸ் வீரரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டருமான மிட்செல் மார்ஷ் முதல் இன்னிங்சில் பந்து வீசிய போது, கணுக்கால் காயம் அடைந்து வெளியேறினார். முதல் ஆட்டத்திலேயே காயத்தால் சன்ரைசர்ஸ் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டுள்ளது ரசிகர்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"