Ravichandran Ashwin | Rohit Sharma | India Vs England: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ரோகித்துக்கு அஸ்வின் புகழாரம்
இந்நிலையில், இந்த தொடரில் ராஜ்கோட் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனி விமானம் மூலம் சென்னை பறந்தார்.
அவரது தயார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைப் பார்ப்பதற்காக அஸ்வின் அணியை விட்டு வெளியேறினார். அவர் மீதமிருந்த போட்டி நாள்களில் மேற்கொண்டு ஆட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஸ்வின் போட்டியின் 4வது நாளில் அணியில் இணைந்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், தனது அம்மாவின் உடல்நிலை மோசமானதாக மனைவி சொன்னதும் கண்ணீர் விட்டு அழுததாகவும், அப்போது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உடனடியாக வீட்டுக்கு சென்று அம்மாவை பார்ப்பதற்காக தனி விமானத்தை வர வைத்ததாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு கடைசி வரை உதவிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், "அம்மா சுயநினைவுடன் இருக்கிறாரா என்று கேட்டேன். பார்க்கும் நிலையில் இல்லை என்று டாக்டர் என்னிடம் கூறினார். அதனால் நான் அழ ஆரம்பித்தேன். எனவே, நேரில் சென்று பார்க்க ஒரு விமானத்தை தேடினேன். ஆனால் ராஜ்கோட் விமான நிலையத்தில் 6 மணிக்கு மேல் எந்த விமானமும் இல்லை.
அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது என்னுடைய அறைக்கு வந்த ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உடனடியாக குடும்பத்தை சென்று பார் என்று சொன்னார்கள். அணியின் உடற்பயிற்சியாளரான கமலேஷ் எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவரை என்னுடன் சென்னைக்கு செல்லுமாறு ரோகித் சொன்னார்.
இருப்பினும், அவரை நான் திரும்பி இருக்கச் சொன்னேன். ஆனால் கீழே கமலேஷும், செக்யூரிட்டியும் எனக்காக காத்திருந்தனர். விமான நிலையம் நோக்கி செல்லும் வழியில் கமலேசை அழைத்த ரோகித் சர்மா கடினமான நேரத்தில் என்னுடன் இருக்கும் படி கேட்டுக் கொண்டார். அப்போது இரவு 9.30 மணி. நான் வியந்து போனேன்.
அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. விமானத்தில் நான் பேசுவதற்கு அந்த இருவர் மட்டுமே இருந்தனர். வீட்டுக்கு திரும்பும் பயணம் முழுவதும் ரோகித் கமலேஷ்க்கு போன் செய்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். அது போன்ற நேரத்தில் நானும் கேப்டனாக இருந்தால் என்னுடைய வீரரை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருப்பேன்.
ஆனால், துணைக்கு ஆள் அனுப்பி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்குமாறு சொல்லியிருப்பேனா? என்பது தெரியாது. அன்றைய நாளில்தான் ரோகித் சர்மாவில் நான் சிறந்த தலைவரை பார்த்தேன். நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன். ஆனால் ரோகித் சர்மா நல்ல மனதை கொண்டுள்ளதாலேயே இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.
ரோகித் ஒரு சிறந்த நபர், ஒரு சிறந்த தலைவர், கோல்டன் ஹார்ட். தோனிக்கு நிகராக அவர் 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்றுள்ளார். கடவுள் அதை எளிதாக கொடுக்க மாட்டார். அவருக்கு அந்த அனைத்தையும் விட கடவுள் இன்னும் பெரிதாக கொடுப்பார்.
ஏனெனில் சுயநலமாக சிந்திக்க கூடிய இந்த சமூகத்தில் அவரைப்போல் மற்றவர்களின் நலனை நினைப்பவர்கள் அரிதானவர்கள். கேப்டனாக வீரருக்கு எந்த கேள்வியுமின்றி ஆதரவு கொடுக்கும் அவர் மீது ஏற்கனவே நான் மரியாதை வைத்துள்ளேன். இது எளிதான விஷயம் அல்ல. இதுபோன்று தோனியும் செய்வார். ஆனால், ரோகித் இன்னும் 10 படி மேல் சென்று செய்துள்ளார்." என்று கூறினார்.
Ravichandran Ashwin sharing a touching story about Rohit helping him to get back to Chennai to see his family during tough situation.
— Johns. (@CricCrazyJohns) March 12, 2024
- Rohit, an unbelievable human being 🫡pic.twitter.com/ziYsuQU4DX
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில், அவர் கைப்பற்றிய இரண்டு ஐந்து விக்கெட்டுகள் அடங்கும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ravi Ashwin shares the emotional gesture from India captain Rohit Sharma during his visit to his mother: ‘Even Dhoni does that, but he takes 10 steps more’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.