India vs Afghanistan: இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் தனது 5 டி20 சதத்தை விளாசி சாதனை படைத்த கேப்டன் ரோகித் 121 ரன்கள் குவித்தார். அவருடன் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்த ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 213 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி, முதல் சூப்பர் ஓவரின்போது இரு அணிகளுமே 16 ரன்களை எடுத்ததால் 2-வது சூப்பர் ஓவருக்கு போட்டி நகர்ந்தது. அந்த நேரத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 11 ரன்களை மட்டுமே எடுக்க 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, முதல் சூப்பர் ஓவரை ஏற்கனவே முகேஷ் குமார் வீசிவிட்டார் என்பதனால் இரண்டாவது சூப்பர் ஓவரை ஆவேஷ் கான் வீசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்தினை ரவி பிஷ்னோயிடம் கொடுத்தார். ரோகித் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக முதல் மூன்று பந்திகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பிஷ்னோய் இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றியைப் பெற்றது.
கடைசி நிமிட மாற்றம்
இந்நிலையில், நேற்றைய இரண்டாவது சூப்பர் ஓவரின்போது கேப்டன் ரோகித் சர்மா தன்னை பந்துவீச அழைத்தது தொடர்பாக ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு ஜியோ சினிமாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "எங்கள் இருவரையும் (அவேஷ் கான்) தயாராக இருக்கும்படி கூறப்பட்டது. ஆனால் இரண்டு வலது கை வீரர்கள் உள்ளே வருவதைக் கண்டதும், லெக்-சைடில் பெரிய பவுண்டரி என்பதால் என்னை பந்து வீசச் சொன்னார்கள்" என்று அவர் கூறினார். அவர் பெரும்பாலும் கேப்டன் ரோகித்தை குறிப்பிட்டு பேசியும் இருந்தார்.
டிராவிட் கருத்து
இந்த கடைசி நிமிட மாற்றம் குறித்து போட்டி முடிந்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், "ரோகித் நேற்று ஒரு கேப்டனாக அவருடைய தைரியத்தை நம்பிதான் அந்த முடிவை எடுத்தார். நிச்சயம் இந்த 11 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் கிடையாது என்றாலும் சுழற்பந்து வீச்சாளரால் விக்கெட்டுகளை எடுக்க முடியும் என்று ரோகித் சர்மா நினைத்து தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார். அதேபோன்று ரவி பிஷ்னோய் பேக் ஆஃப் லென்த்தில் இரண்டு சிறப்பான பந்துகளை வீசினார்.
ஒருவேளை அவர் கொஞ்சம் மேலே பந்தினை வீசி இருந்தால் கூட இரண்டு பந்துகளும் சிக்சருக்கு போயிருக்கும். ஆனால் ரவி பிஷ்னோய் கேப்டன் கொடுத்த நம்பிக்கையால் தைரியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று ரோகித் சர்மாவும் இக்கட்டான நேரத்தில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளரால் போட்டியை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் எடுத்த அந்த தைரியமான முடிவு நமக்கு இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.
WHAT. A. MATCH! 🤯
— BCCI (@BCCI) January 17, 2024
An edge of the seat high scoring thriller in Bengaluru ends with #TeamIndia's match and series win 🥳
Scorecard ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/731Wo4Ny8B
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.