ஆசிய கோப்பை 2023 தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 13 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் தலைமை தேர்வாளரான சந்தீப் பாட்டீல், கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் தேர்வாளர்களின் தலைவராக இருந்த எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோர் அடங்கிய குழு ஆசியக் கோப்பைக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சிறப்பு நிகழ்ச்சியில் இதைப் பற்றி விவாதித்தினர்.
'இஷான் கிஷன் தொடக்க வீரர்' - ரவி சாஸ்திரி, எம்.எஸ்.கே கருத்து
ரவி சாஸ்திரி தேர்வு செய்த லெவன் அணியில் கே.எல் ராகுலுக்கு இடம் அளிக்கவில்லை, அவரது முதல் தேர்வாக விக்கெட் கீப்பர் வீரரான இஷான் கிஷன் தான் இருந்தார். அவரையே தொடக்க வீரராகவும் தேர்வு செய்துள்ளார். கில், ரோகித் மற்றும் கோலி போன்ற வீரர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்றும், டாப் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட ஷிகர் தவானின் உதாரணத்தையும் அவர் மேற்கோள் காட்டினார்.
"இஷான் கிஷன் தொடக்க வீரராக பேட் செய்ய வேண்டும். வேறு எந்த இடத்திலும் அவரை களமிறக்க கூடாது. மற்றவர்கள் நெகிழ்வாக இருக்க வேண்டும். ரோகித், விராட் மற்றும் சுப்மன் கில் இடையே, அது உங்களுக்கு நம்பர்.2, 3 மற்றும் 4 ஆக இருக்கலாம். மேலும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் அந்த நேரத்தில் பயிற்சியாளராக இருந்தவன். ஷிகர் தவானுக்கு தகுதியான மதிப்பை வழங்கவில்லை என்று நான் தொடர்ந்து சொல்கிறேன். அதாவது, அவர் ஒரு அற்புதமான வீரர்.
2019 உலகக் கோப்பையில் நாம் அரையிறுதியில் தோல்வியடைந்தோம். நாங்கள் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் உலகக் கோப்பையில், அவர் அந்த இடத்தில் விளையாடவில்லை. இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. டாப் ஆர்டரில் ஒரு இடது கை வீரர், மூன்று வலது கை வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால், பந்தை ஸ்விங் ஆகும் போதும், அதனை எங்கு பந்துவீச வேண்டும் மற்றும் தொடர்ந்து எப்படி பந்துவீச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளலாம்." என்று கூறினார்.
ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை ஒப்புக் கொண்ட எம்.எஸ்.கே பிரசாத், “ரோகித்துடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றால், இஷான் கிஷன் அணியில் இடம்பிடிப்பது சிக்கலாக இருக்கும். நம்பர் 4 அல்லது நம்பர் 5 இல் அவர் விளையாடிய சில ஆட்டங்களை பார்த்தால், அவர் தனது திறமையை நிரூபித்தார் என்றால் அதில் கேள்வி எழுகிறது."என்று அவர் கூறினார்.
ரவி சாஸ்திரி மற்றும் எம்.எஸ்.கே பிரசாத் ஆகியோரின் கருத்துக்கு உடன்படாத சந்தீப் பாட்டீல், "ரோகித் - கில் தொடக்க ஜோடியை மாற்ற விரும்பவில்லை. சுப்மன் கில் நல்ல ஃபார்மில் உள்ளார். ரவியும், எம்.எஸ்.கே.யும் (கிஷானுக்கு ஆதரவாக) முன்வைத்த வாதம் எனக்கு புரிகிறது. ஆனால், அணிக்காக இது மிகவும் முக்கியமானது. ஒரு இடது கை வீரருடன் தொடக்க வீரராக ரோகித் சர்மா வசதியாக இருப்பார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கில் தான் அவருடன் ஓபன் செய்ய வேண்டும்," என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, "இஷான் கிஷன் நன்றாகச் செயல்படுவதைப் பற்றி நாங்கள் பேசினோம். சுப்மன் கில்லும் ஒரு அற்புதமான ஆண்டை (2023) பெற்றுள்ளார். இங்குதான் அந்த நெகிழ்வுத் தன்மை வருகிறது. இங்குதான் நீங்கள் வீரரின் கண்டுபிடிப்பைப் பார்க்க வேண்டும். சுப்மான் கில் எப்படி இருப்பார். முதலிடத்தில் பேட்டிங் செய்வதற்கு மாறாக நம்பர்.3 அல்லது நம்பர் 4 பேட் செய்யும்படி கேட்டால் உணர்கிறீர்களா? யாருக்கும் அந்தஸ்து இல்லை. விராட் நான்கில் பேட் செய்ய வேண்டும் என்றால், அவர் அணிக்காக நான்கில் பேட் செய்வார்." என்று கூறினார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் இந்திய உலகக் கோப்பை அணிக்கு 15 பேர் கொண்ட அணி முக்கிய குறிப்பை உணர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.