Advertisment

'இத மட்டும் பண்ணாத': சூர்யகுமாரிடம் ரஷித் கான் சொன்னது என்ன? லிப் ரீடிங் செய்த ரவி சாஸ்திரி - வீடியோ

பொதுவாக, தனது பந்தை எந்த வீரர் ஸ்வீப் அடித்தாலும் முறைத்துப் பார்க்கும் ரஷித் கான், சூர்யகுமார் அடுத்தடுத்து அடித்தற்காக பெரிய அளவில் முகம் சுளிக்கவில்லை.

author-image
WebDesk
New Update
Ravi Shastri On Suryakumar Yadav Rashid Khan chat sweep shot during IND vs AFG match video Tamil News

பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நேற்று வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Suryakumar Yadav | Rashid Khan | Ravi Shastri | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்  கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நேற்று வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. 

Advertisment

மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்து இருந்தாலும், இந்திய அணி டாப் ஆடர் பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் பவுலர்கள் திணறடிக்க செய்திருந்தனர். தொடக்க வீரராக வந்த கேப்டன் ரோகித் 8 ரன்னில் வெளியேற்றப்பட்டார். அவருடன் ஜோடி அமைத்த மற்றொரு தொடக்க வீரரான கோலி சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். 

அவர் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்து ஒரு சிக்ஸரை மட்டும் பறக்கவிட்டு இருந்தார். இந்த ஜோடியில் 4 பவுண்டரியை பறக்கவிட்ட ரிஷப் பண்ட் 20 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆனார். அவர் வீசிய அடுத்த ஓவரில் கோலியும்  (24 ரன்) அவுட் ஆகிய ஏமாற்றம் அளித்தார். பிரிட்ஜ்டவுன் ஆடுகளம் ஃபிளாட்டாக இருக்கவே அதன் உதவியுடன் பந்தை சுழல விட்டு ரஷித் கான் விக்கெட்களை வீழ்த்திக் கொண்டிருந்தார். 

ஆனால், சூர்யகுமார் யாதவ் - சிவம் துபே ஜோடியை உடைக்க ஆப்கான் வீரர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நூர் அஹ்மத் வீசிய பந்தில் சிவம் துபே அபாரமாக ஒரு சிக்சரை விளாச, 11வது ஓவரை வீச ரஷித் கான் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டைலில் ஸ்வீப் ஷாட் அடித்து அசத்தலான பவுண்டரியை விரட்டினார். அதனால், 2வது பந்தை ரஷித் கான் கூக்ளியாக வீசவே, ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. பிறகு, 3வது பந்தை மீண்டும் லெக் திசையில் பிட்ச் செய்தார்.

இப்போது அதனை சரியாக கணித்த சூர்யகுமார் யாதவ், ஸ்வீப் ஷாட் மூலம் டீப் ஸ்கொயர் லெக் திசையில் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். இப்படி ஸ்வீப் ஷாட்கள் மூலம் ரஷித் கானின் திட்டத்தை முறியடித்து இருந்தார் சூர்யகுமார் யாதவ். பொதுவாக, தனது பந்தை எந்த வீரர் ஸ்வீப் அடித்தாலும் முறைத்துப் பார்க்கும் ரஷித் கான்,  சூர்யகுமார் அடுத்தடுத்து அடித்தற்காக பெரிய அளவில் முகம் சுளிக்கவில்லை. 

ஆனால், 'இனிமேல் ஸ்வீப் ஆடாதே' என்று சூர்யகுமாரிடம் ரஷித் கான் கூறியது போன்ற ஒரு உரையாடல் நிகழ்ந்தது. ரஷித் கானின் பந்துகளை சூர்யகுமார் துரத்தி அடித்தவுடன், அந்த ஓவர் முடிவில் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி "எனது பந்துகளில் ஸ்வீப் ஆடுவதை நிறுத்து" என்று ரஷித் கான் சூர்யகுமாரிடம் சொல்கிறார் என்று அவர் லிப் ரீடிங் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த ஆட்டத்தில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கான் 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியில் தரப்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யகுமார் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு ஆட்டத்தின் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

Suryakumar Yadav Ravi Shastri Rashid Khan T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment