ஆஸ்திரேலிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் இன்று வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள்
தலைமை பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரியிடம், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய ரவி சாஸ்திரி, 'நியூசிலாந்துக்கு எதிரான அவரது சமீபத்திய பார்ம் மற்றும் பேட்டிங் ஆர்டரில் எந்த நிலையிலும் பேட் செய்யும் திறன் காரணமாக அஸ்வின், ஜடேஜாவை காட்டிலும் வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்கப்பட்டது' என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ I