இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் யார் அந்த பயிற்சியாளர் பதவியை அலங்கரிக்க போகிறார் என்ற தகவல் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் மற்றும் பீல்டிங் கோச் ஸ்ரீதர் உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி, 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது, 2018ம் ஆண்டில் ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களை வென்றுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 6 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், 2 பேர் ( ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புட்) மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
ராபின் சிங்
இந்திய அணியின் ஆல் ரவுண்டராக அசத்திய ராபின் சிங், 2001ம்ஆண்டில் ஓய்வு பெற்றார். 19வயதுக்குட்பட்டோருக்கு இந்திய அணி, இந்திய ஏ அணி உள்ளிட்டவைகளின் பயிற்சியாளராக பதவிவகித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராபின் சிங், பின் மும்பை அணியின் பயிற்சியாளரானார். தலைமை பயிற்சியாளராக இருந்த ராபின், பின் பேட்டிங் பயிற்சியாளர் ஆனார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
குல்னா டிவிசன், உவா, சிட்டி கைதக், காரைக்குடி காளை, கேரளா கிங்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் உள்ளிட்ட அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
லால்சந்த் ராஜ்புட்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராஜ்புட், தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
2016 -2017ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். அசாம் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். நடப்பு ஆண்டில் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வின்னிபெக் ஹாக்ஸ் அணியின் பயிற்சியாளர் ராஜ்புட் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தவிர்த்து தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன், மைக்கேல் ஹெசன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி மற்றும் இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்காக, கபில்தேவ், அஞ்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி அடங்கிய குழு, வரும் 6ம் தேதி கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.